செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே உள்ள நெடுங்குன்றம் பெருங்களத்தூர் சாலையில் நேற்று இரவு முதலை நடமாடியதால் அப்பகுதி மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.


தென்மேற்கு வங்கக்கடலில்  ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் “மிக்ஜாம்” புயலாக தீவிரமடைந்துள்ளது. இதனால் ஆந்திர பிரதேசம் மற்றும் வட தமிழகம்-புதுச்சேரியை ஒட்டிய இடங்களுக்கு புயல் எச்சரிக்கையானது விடுக்கப்பட்டுள்ளது. இந்த “மிக்ஜாம்” புயலானது தற்போது தீவிரமடைந்து, சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 130 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. அதேபோல் 14 கி.மீ., வேகத்தில் இந்த புயலானது தீவிரமடைந்து வடக்கு -வடமேற்கு நோக்கி நகர்ந்து தெற்கு ஆந்திராவில் நெல்லூருக்கும், மசூலிப்பட்டணத்துக்கும் இடையே நாளை (டிசம்பர் 5) கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த மூன்று தினங்களாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பரவலாக கன மழையானது பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு வண்டலூர் அருகே உள்ள நெடுங்குன்றத்திலிருந்து பெருங்களத்தூர் செல்லும் சாலையில் தனியார் பள்ளி அருகே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலையை கடக்கும் போது அங்கு சுமார் ஒன்பது அடி நீளமுள்ள பெரிய முதலை ஒன்று இருப்பதை கண்டனர். 






இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தங்களது செல்போனில் படம் பிடிக்க ஆரம்பித்தனர். அதில் முதலை சிறிது நேரம் கழித்து சாலையோரத்தில் உள்ள தண்ணீரில் இறங்கி சென்றது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் தீயாய் பரவி அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. எனவே வனத்துறையினர் விரைந்து குடியிருப்பு பகுதிக்குள் சுற்றித்திரியும் முதலையை பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். முன்னெச்சரிக்கையாக அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 


இதற்கிடையில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில், உள்நாடு மற்றும் சர்வதேச விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு அபுதாபியில் இருந்து வந்த 2 விமானங்கள், துபாயில் இருந்து வந்த 2 விமானங்கள் மற்றும் பக்ரைன், மும்பையில் இருந்து வந்த மொத்தம் 6 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல், பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டன. மேலும் சென்னையில் இருந்து புறப்படும் மற்றும் வருகை விமானங்கள் தலா 10 என மொத்தம் 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பல விமானங்கல் ரத்து செய்யப்பட அல்லது வேறு விமான நிலையத்துக்கு மாற்றி விட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.