தென் கிழக்கு வங்கக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயலுக்கு மண்டோஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் இந்தப் பெயரைக் கொடுத்துள்ளது.
இந்தப் புயலானதுது மேலும் வடக்கு நோக்கி நகர்ந்து நாளை டிசம்பர் 8 ஆம் தேதி வட தமிழகம் தெற்கு ஆந்திரா இடையே கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தின் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் டிசம்பர் 9ஆம் தேதி அதிகனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னைக்கு டிசம்பர் 10 ஆம் தேதிக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அன்று சென்னயில் கனமழை முதல் மிககனமழை வரை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 8 முதல் 10 வரை தமிழகத்தில் பரவலாக பல இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் தற்போதைய நிலவரப்படி இந்தப் புயல் புதுச்சேரி, ஸ்ரீஹரிக்கோட்டா இடையே டிசம்பர் 9 இரவு 10 அதிகாலை வேளையில் கரையைக் கடக்கும் என்றும் புயலாகவே கடக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் டிசம்பர் 8ஆம் தேதியும் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருபத்தூர், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டஙக்ளில் டிசம்பர் 9ஆம் தேதியும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் டிசம்பர் 10 ஆம் தேதியும் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.
மழை அலர்ட்கள் ஒரு பார்வை:
வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு அறிவிக்கும் எச்சரிக்கைகள் தான் இந்த அலர்ட்கள். அவைகள் பொதுவாக பச்சை எச்சரிக்கை (Green Alert), மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert), அம்பர் அல்லது ஆரஞ்ச் எச்சரிக்கை (Amber Alert), மற்றும் சிவப்பு எச்சரிக்கை (Red Alert) ஆகும்.
பச்சை எச்சரிக்கை (Green Alert) : பொதுவாக மழை பெய்யும் அறிகுறி வானில் தென்பட்டாலே இந்த எச்சரிக்கை விடப்படும். இதனால் மக்கள் யாரும் பயப்பட வேண்டிய தேவை இல்லை.
மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert) : வானிலை மிகவும் மோசமாக இருப்பதை தெரிவிப்பதே இந்த மஞ்சள் எச்சரிக்கை ஆகும். இது போன்ற நேரங்களில் மக்கள் தங்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் தயார் நிலையில் வைத்துக் கொள்வது நல்லது.
அம்பர் எச்சரிக்கை (Amber Alert) : பொருட்சேதம் அல்லது உயிர்ச் சேதம் ஏற்படுத்தும் அளவிற்கு வானிலை மோசமாக இருக்கும் பட்சத்தில் வானிலை ஆய்வு மையம் இந்த எச்சரிக்கையைத் தரும். இது போன்ற நேரங்களில் மக்கள் பயணங்களை தவிர்ப்பது நலம்.
சிவப்பு எச்சரிக்கை (Red Alert) : மக்களின் இயல்பு நிலை பாதிக்கும் வகையிலும், அடிப்படை தேவைகளை அடைய முடியாத நிலை ஏற்படும் வகையில் மழைப் பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் போதே இந்த எச்சரிக்கை அளிக்கப்படும். போக்குவரத்து, மின்சாரம், இணையம், மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்படும் வகையில் மழை பெய்யும் போது தான் இது போன்ற எச்சரிக்கைகள் விடப்படும்.