மாண்டஸ் புயலின் எதிரொலியாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. இன்றும் பல்வேறு பகுதிகளுக்கு மிக கன மழை  பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தென்மேற்கு வங்க கடலில் சென்னைக்கு 320  கிலோமீட்டர் தொலைவில் மாண்டஸ் தீவிர புயல் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 06 மணி நேரத்தில்  தீவிரமான புயலின் தீவிரத்தை தக்கவைத்து அதன் பின்னர் படிப்படியாக வலுவிழந்து சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளது


தென்மேற்கு வங்கக்கடலில் தீவிர புயல் "Mandous" கடந்த 06 மணி நேரத்தில் 12 கி.மீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, டிசம்பர் 9 2.30 மணி நேரத்தில் தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டிருந்தது.  


இது திருகோணமலைக்கு வட-வடகிழக்கே சுமார் 240 கிமீ தொலைவில் (இலங்கை), யாழ்ப்பாணத்திலிருந்து 240 கிமீ கிழக்கு-வடகிழக்கே (இலங்கை), காரைக்காலில் இருந்து 240 கிமீ கிழக்கு-தென்கிழக்கே மற்றும் சுமார் 320 கிமீ தெற்கே- சென்னைக்கு தென்கிழக்கே மையம் கொண்டுள்ளது.  


09.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும்,


சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,


தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


மழை பொறுத்தவரை அதிகபட்சமாக (மில்லிமீட்டரில்):


நுங்கம்பாக்கம்- 52.5 மி.மீ, மீனம்பாக்கம்- 50.3 மி.மீ, பாம்பன்- 25.0 மி.மீ, நாகப்பட்டினம்- 22.0 மி.மீ, காரைக்கால்- 18.0 மி.மீ, தொண்டி- 17.0 மி.மீ, அதிராமபட்டினம்- 15.0 மி.மீ, பாண்டிச்சேரி- 8.0 மி.மீ, கடலூர்- 5.0 மி.மீ, மதுரை- 3.0 மி.மீ, சேலம்- 2.0 மி.மீ, திருச்சிராப்பள்ளி - 0.4 மி.மீ, வேலூர்- 0.3 மி.மீ, ஈரோடு- 1.0 மி.மீ, க.பரமத்தி- 0.2 மி.மீ,  பரங்கிப்பேட்டை- 0.6 மி.மீ, கோவை - 0.5 மி.மீ மழை பதிவாகியுள்ளது. 


சென்னையை பொறுத்தவரை சென்னை  53.0 மி.மீ,  எண்ணூர்_போர்ட்  30.0 மி.மீ,  மீனம்பாக்கம் (சென்னை) 52.0 மி.மி என பதிவாகியுள்ளது.


சென்னையில் நேற்று மாலை தொடங்கிய மழை விடிய விடிய பெய்து வருகிறது. நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், ஆலந்தூர், சைதாப்பேட்டை, கிண்டி, ராமபுரம், போரூர் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் எங்கும் மழை நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சென்னை பட்டினப்பாக்கம், அடையாறு, பெருங்குடி, வேளச்சேரி, மடிப்பாக்கம், ஆலந்தூர், ஆதம்பாக்கம், கிண்டி, சைதாப்பேட்டை, சின்ன மழை, நந்தனம், தேனாம்பேட்டை, ஆயிரம் விளக்கு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.