Cyclone Ditwah : டிட்வா புயல் எச்சரிக்கை காரணமாக இன்றும், நாளையும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்த நிலையில் 2 நாட்களுக்கு வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க நேற்று மாலை முதல் புதுச்சேரியில் உள்ள கடைகளில் மக்கள் குவிந்தனர்.
கனமழை எச்சரிக்கையால் புதுச்சேரியில் பொருட்கள் வாங்க கடைகளில் குவிந்த மக்கள்!
டிட்வா புயல் எச்சரிக்கை காரணமாக இன்றும், நாளையும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. அதையொட்டி இன்றும், நாளையும் அவசியம் இல்லாமல் பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம். பாதுகாப்பாக இருக்க வேண்டும் என புதுச்சேரி அரசு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து 2 நாட்களுக்கு வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க நேற்று மாலை முதல் புதுச்சேரியில் உள்ள கடைகளில் மக்கள் குவிந்தனர்.
இதில் மளிகை, காய்கறி, மருந்து, மெழுகுவர்த்தி , மளிகை கடைகள், பேக்கரி, மருந்தகங்கள் என பல கடைகளில் நேற்று மாலையே பொருட்கள் தீர்ந்து விட்டன. அதே போல் பால், பிரட் உள்ளிட்ட பொருட்களுக்கும் வாங்கி வருகின்றனர். புதுச்சேரியில் உள்ள பெட்ரோல் பங்குகளிலும் மக்கள் வாகன ஓட்டிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
வடகிழக்கு பருவமழை தீவிரம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளது. அந்த வகையில் அக்டோபர் மாதம் அடுத்தடுத்து புயல் சின்னங்கள் உருவாகி தமிழகத்தில் மழை பெய்த நிலையில், நவம்பர் மாதம் முதல் 15ஆம் தேதி வரை பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நீடித்தது. இதனையடுத்து வங்க கடலில் மீண்டும் உருவான காற்றழுத்த தாழ்வ பகுதியால் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை கொட்டியது. இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் நிலவிய "டிட்வா" புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.
வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளை கடந்து நாளை (30-ஆம் தேதி) அதிகாலை, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடதமிழகம் புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தென் மாவட்டங்களில் சூறைக்காற்றோடு மழையானது நேற்று காலை முதல் வெளுத்து வாங்கி வருகிறது. இந்த புயல் தற்போது டெல்டா மாவட்டங்கள் அருகே நிலவி வருகிறது. இன்று இரவு அல்லது நாளை காலை வட மாவட்டங்களான சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
ஆட்சியர் குலோத்துங்கன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்திய வானிலை ஆய்வு மையம் புதுச்சேரிக்கு நாளை ரெட் அலர்ட் விடுத்துள்ளது. அதிக மழைப் பொழிவு இருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளோம். 60 பேர் கொண்ட இரண்டு தேசிய பேரிடர் மீட்புக்குழு வந்துள்ளது. 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை உள்ளது. 112, 1070, 1077 கட்டணமில்லா தொலைபேசி மூலம் மக்கள் புகார்கள் தெரிவிக்கலாம். கடந்த மழையில் தண்ணீர் தேங்கிய 70 இடங்களில் பொதுப்பணித்துறை- உள்ளாட்சித்துறை மூலம் தற்காலிக மோட்டார் பம்புகள் தண்ணீரை வெளியேற்ற வைத்துள்ளோம்.
ஜேசிபிகளை 46 இடங்களில் தயாராக வைத்துள்ளோம். மக்கள் தங்க 312 இடங்களில் இடங்கள் வைத்துள்ளோம். மக்களுக்கு உணவு தர ஏற்பாடு செய்துள்ளோம். அவசரகாலத்தில் உடன் உதவும் குழு 16 அமைத்துள்ளோம். இக்குழுவில் வருவாய்துறை, போலீஸ் உள்பட பல்வேறு துறையினர் இடம் பெற்றுள்ளனர். யாரும் மழையில் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என மக்களுக்கு கோரியுள்ளோம். இடி, மின்னல் சமயங்களில் பாதுகாப்பாக இருக்கவேண்டும். அத்தியாவசியப் பொருட்களான ரொட்டி, பால், பிரட் போன்ற பொருட்களை இன்றே வாங்கிக் கொள்ளுங்கள். என தெரிவித்தார்.