புதுச்சேரி: புயல் மற்றும் கனமழை காரணமாக புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்துடன் இணைந்த அனைத்துக் கல்லூரிகளின் தோ்வுகளும் சனிக்கிழமை ரத்து செய்யப்படுகின்றன. இத் தோ்வுகள் மற்றொரு நாளில் நடைபெறும் என புதுச்சேரி பல்கலைக் கழக நிா்வாகம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
டிட்வா புயலால் புதுச்சேரிக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. டித்வா புயல் காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் சனிக்கிழமை இன்று 29ம் தேதி பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மாலை கல்வியமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்ட உத்தரவில், ‘டித்வா புயல் காரணமாக அதிக கனமழை பொழியும் என்பதால் நவம்பர் 29 புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் அனைத்து அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்படுகிறது’ என தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி பல்கலை கழக தோ்வுகள் இன்று ரத்து
புயல் மற்றும் மழை காரணமாக புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்துடன் இணைந்த அனைத்துக் கல்லூரிகளின் தோ்வுகளும் சனிக்கிழமை ரத்து செய்யப்படுகின்றன. இத் தோ்வுகள் மற்றொரு நாளில் நடைபெறும். புதுச்சேரி பல்கலைக் கழக நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பல்கலைக் கழகத்துடன் இணைந்துள்ள புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம், அந்தமான் நிக்கோபா் மற்றும் லட்சத் தீவுகளில் உள்ள கல்லூரிகளின் பாடத் தோ்வு, செய்முறை தோ்வு இரண்டும் தள்ளி வைக்கப்படுகின்றன. மாற்றியமைக்கப்பட்ட தேதி பின்னா் தெரிவிக்கப்படும்.
விமான சேவைகள் ரத்து:
புதுச்சேரி மாநிலத்தில் இருந்து இயக்கப்படும் விமான சேவைகள் அனைத்தும் இன்று சனிக்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஹதராபாத்தில் இருந்து புதுவைக்கு வரும் விமானமும், புதுவையில் இருந்து பெங்களூரு சென்று வரும் விமானமும், புதுவையில் இருந்து ஹைதராபாத் செல்லும் விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை விமான நிலைய இயக்குனர் ராஜசேகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த அப்டேட்
இதனிடையே தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான் வெளியிட்ட பதிவின்படி, “டித்வா புயல் நவம்பர் 29ம் தேதி அதிகாலை அப்டேட்டின்படி, புயலின் பாதையில் எந்த மாற்றமும் இல்லை. இது கடலோர பைபாஸ் ரைடராக தமிழக கடற்கரைக்கு இணையாக நகரும். டெல்டா பகுதியில் குறிப்பாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் கனமழை தொடங்கியுள்ளது. நாகையில் இன்று அதிகாலை 3.30 மணி வரை நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது, மேலும் காலை 8.30 மணிக்குள் 150-175 மி.மீ. தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
மழை மெதுவாக கடலூர் அருகே, பின்னர் புதுச்சேரிக்கு நகர்ந்து அடுத்ததாக மாறி, பின்னர் இரவில் சென்னைக்கு மாறும். ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு சிறந்த நாளாக இருக்கும். நேற்று காற்று வீசுவதைக் கண்டு, டெல்டா அருகே வானிலை சரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. மேலும் டிட்வா புயலானது நவம்பர் 30 ஆம் தேதி சென்னைக்கு அருகில் வரும்” என தெரிவித்துள்ளார்.
அலர்ட் மக்களே !
புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது அதிகனமழை கொட்ட வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் செல்லக்கூடாது, அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைக்க வேண்டும், பூங்கா, கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என பல அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளது. எமர்ஜென்ஸி விளக்குகள், செல்போன்களை சார்ஜ் செய்து வைக்கவும், தாழ்வான இடங்களில் இருக்கும் முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் பாதுகாப்பான இடத்திற்கு முன்கூட்டியே செல்லவும் கூறப்பட்டுள்ளது. ஏதேனும் உதவி தேவைப்பட்டால் 1913 என்ற எண்ணை அழைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.