ஜெயலலிதா பல்கலைக்கழகம் அறிவிக்கப்பட்டு அதற்கான இடம் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போதுவரை பல்கலைக்கழகத்தைச் செயல்படுத்த அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும், பல்கலைக்கழகத்தைச் செயல்பட வைக்க வேண்டும் எனவும் உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதிமுக ஆட்சியில் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து, விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை மூட முயற்சிகள் நடப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறிவந்தார். இந்நிலையில் டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகத்திற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யவும், பதிவாளரை நியமிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.




அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்ட மாணவர்களின் நலனுக்காக, வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தைப் பிரித்து, விழுப்புரத்தைத் தலையிடமாகக் கொண்டு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. துணைவேந்தர் நியமிக்கப்பட்டு, பல்கலைக்கழக கட்டுமானத்திற்காக விழுப்புரம் மாவட்டம், செம்மேடு கிராமத்தில், 70 ஏக்கர் நிலம் அதிமுக அரசால் ஒத்துக்கப்பட்டது. நிலம் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போதைய அரசின் புறக்கணிப்பால் பல்கலைக்கழகம் இன்னும் பழைய தாலுக்கா அலுவலகத்தில் செயல்படுகிறது. இதுவரை பல்கலைக்கழகத்திற்குப் பதிவாளரும், போதுமான பணியாளர்களும் நியமிக்கப்படாததால், பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் பதிவாளர், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அதன் முதுகலை மையத்தில் முதுகலைப் படிப்பில் சேர விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது சட்டத்தை மீறிய செயல். அந்த அறிவுப்புக்குத் தடை விதிக்கவேண்டும்” என மனுவில் கோரியுள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி அமர்வில் ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வரவுள்ளது.




கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை தலைமை செயலகத்தில் உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்கள் சந்திப்பில் , அண்ணாமலை பல்கலைக்கழகம் கூட்டுப் பல்கலைக்கழகமாக உருவாக்கப்படும். விழுப்புரத்தில் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலையுடன் இணைக்கப்படும். அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் 4 மாவட்ட கல்லூரிகளை இணைக்கும் திட்டம் உள்ளது. விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்ட கல்லூரிகளை இணைக்கும் திட்டம் உள்ளது. கல்வித்துறையின் நிதிநிலையை பொறுத்து அண்ணாமலை பல்கலையுடன் இணைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.




பெயரளவில் தொடங்கப்பட்ட ஜெ. பல்கலைக்கழகம் தனித்து செயல்பட முடியாது. முன்னாள் தாலுகா அலுவலகத்தில்தான் தற்போது ஒரு பெயர்ப்பலகை வைக்கப்பட்டு உள்ளது. ஜெ.சட்டப்பல்கலைக்கழகம் என்று பெயர் வைத்ததை தவிர நிதி ஒதுக்கீடோ வேறு ஏற்பாடோ செய்யப்படவில்லை. ஜெ.சட்டப் பல்கலைக்கழகத்துக்கு துணை வேந்தர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார். ஜெ.பல்கலைக்கழகத்துக்கு பதிவாளரோ, வேறு அதிகாரிகளோ நியமிக்கப்படவில்லை. ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகத்துக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மாணவர்கள் நலனுக்காக வேலூர், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை பிரித்து டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம் விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு உருவாக்கப்பட்டது என்று அவர் தெரிவித்திருந்த நிலையில்  முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.