அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்க தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், தேர்தல் ஆணையத்திற்கு அத்தகைய அதிகாரம் கிடையாது என, சட்டத்துறை முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பூசல், வழக்குகள்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, அதிமுக, இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாகப் பிரிந்து பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன. இந்நிலையில், கைட்சியை முழுவதுமாக கைப்பற்றிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் பொறுப்பேற்றார். மேலும், வழக்கின் மூலம் இரட்டை இலை சின்னத்தையும் தன் பக்கமாக இழுத்துக்கொண்டார். அதோடு நிற்காமல், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலரை, கட்சியிலிருந்தும் நீக்கினார் எடப்பாடி பழனிசாமி.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளரானதற்கும், அவர் அணிக்கு இரட்டை இலை சின்னம் கொடுக்கப்பட்டதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ் அணி, வழக்குகளையும் தொடர்ந்தது. அந்த வழக்குகள் உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த நிலையில், தேர்தல் ஆணையத்திலும் ஓபிஎஸ் தரப்பு முறையிட்டது.

Continues below advertisement

இதையடுத்து, தேர்தல் ஆணையமும் அனைத்து தரப்பிற்கும் நோட்டீஸ் அனுப்பி, விளக்கங்களை கேட்டது. இதனிடையே, தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்குமாறு இபிஎஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு, அதற்கு ஆதரவாக தீர்ப்பும் வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ஓபிஎஸ் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டு, வழக்கின் விசாரணை நடைபெற்று, அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை பிப்ரவரி 12-ம் தேதி அறிவிப்பதாக தெரிவித்திருந்தனர்.

அதிமுக தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

அதன்படி, இன்று(12.02.25) வழக்கின் தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள், அதிமுக உட்கட்சி விவகாரத்தை விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு தடையில்லை எனக் கூறி, எடப்பாடி பழனிசாமி தரப்பு மனுவை தள்ளுபடி செய்தனர். உட்கட்சி விவகாரத்தை மட்டுமல்லாமல், இரட்டை இலை சின்னம் தொடர்பாகவும் தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இவ்விவகாரத்தை விசாரிக்க உரிமை உள்ளதா, இல்லையா என்பதில் சட்டவிதிகளின்படி ஆராய்ந்து, தேர்தல் ஆணையம் திருப்தி அடைந்தபின் விசாரிக்கலாம் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

தேர்தல் ஆணையத்திற்கு குமாஸ்தா வேலைதான் - சி.வி. சண்முகம்

உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அதிமுகவிற்கு தொடர்பில்லாதவர்களின் மனுக்கள் மீது நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக கூறினார். மேலும், உட்கட்சி விவகாரங்களை விசாரிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு இல்லை என்று தெரிவித்தார்.

அதோடு, சட்டவிதிகளுக்கு உட்பட்டு கட்சிகளை பதிவு செய்யவும், கட்சிகளில் ஏதோனும் திருத்தங்கள் செய்யப்பட்டு அது தெரிவிக்கப்பட்டால், அதையும் பதிவு செய்வது மட்டும்தான் தேர்தல் ஆணையத்தின் வேலை என்றும், அது ஒரு குமாஸ்தா வேலை போன்றதுதானே தவிர, கட்சிகளின் உள் விவகாரத்தில் தலையிடும் உரிமை தேர்தல் ஆணையத்திற்கு இல்லை என்று விமர்சித்தார்.

வழக்கு விசாரணையின்போதே, தங்களுக்கு உரிமை இல்லை என தேர்தல் ஆணையம் ஒப்புக்கொண்டதாகவும், ஆனால், அதன்பின் இல்லாத அதிகாரத்தை இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறுவதாகவும் சி.வி. சண்முகம் தெரிவித்தார்.

அதிமுக உறுப்பினர் என்ற போர்வையில் கொடுக்கப்பட்ட மனுக்கள் போலியானவை என்றும், இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் கையெழுத்திட்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்தான், மனுதாரர்களில் ஒருவரான புகழேந்தி என்றும் சி.வி. சண்முகம் சுட்டிக்காட்டினார்.

எது எப்படியோ, இந்த தீர்ப்புக்குப்பின்னர் அதிமுகவில் எந்த மாதிரியான பிரச்னைகள் வெடிக்கப்போகிறது என்பதை, மற்ற கட்சியினர் மட்டுமல்லாமல், அனைவருமே உற்று நோக்கியுள்ளனர்.