Cuddalore Train Accident Train Name: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள செம்மங்குப்பம் அருகே பயணிகள் ரயில் மீது பள்ளி வேன் மோதிய விபத்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த கோர விபத்தில் மாணவி ஒருவர் உள்பட பள்ளி மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விழுப்புரம் - மயிலாடுதுறை பாசஞ்சர் ரயில்:
இந்த சம்பவத்திற்கு காரணமான ரயில் விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கிச் சென்ற பாசஞ்சர் ரயில் ஆகும். இந்த ரயில் விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு கடலூர் ஆலப்பாக்கம் தாண்டி கடலூர் துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, செம்மங்குப்பம் அருகே இந்த விபத்து அரங்கேறியுள்ளது. இந்த ரயில் மோதிய வேகத்தில் பள்ளி வேன் 50 அடி தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டது. இந்த விபத்தில் பள்ளி வேனில் பயணித்த மாணவர் நிமலேஷ் சம்பவ இடத்திலே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். பள்ளி மாணவர்களின் புத்தகங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பது பார்ப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த விபத்தால் ரயில் நிறுத்தப்பட்டது. மேலும், ரயில் கம்பிகளும் அறுந்து விழுந்தது. இதனால், அந்த வழித்தடத்தில் செல்லும் ரயில்களும் பாதிவழியிலே நிறுத்தப்பட்டது. அந்த வழித்தடத்தில் ரயில் சேவைகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. ரயில்வே துறை சார்பில் இன்டர்லாக்கிங் சிஸ்டம் பணியாற்றவில்லை என்றும், பள்ளி வேன் ஓட்டுனர் கட்டாயப்படுத்தியதாலே கேட்கீப்பர் திறந்ததாக ரயில்வே நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விபத்தில் உயிர் பிழைத்த மாணவன் விஸ்வேஷ் ரயில்வே கேட் திறந்தே இருந்தது என்றும், கேட்கீப்பர் பங்கஜ் சர்மா உள்ளே உட்கார்ந்து இருந்தார் என்றும் பேட்டி அளித்துள்ளார்.
போலீசார் விசாரணை:
மேலும், விபத்திற்கு காரணமான ஓட்டுனர் சங்கரும் ரயில்வே கேட் திறந்து இருந்ததாகவும், ரயில் சென்றுவிட்டதாக கருதியே வேனை ஓட்டியதாக தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ரயில்வே போலீசாரும், தமிழக போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் சோகம்:
அலட்சியமாக செயல்பட்ட பங்கஜ்குமார் ரயில்வே துறையால் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவரை போலீசார் கைது செய்துள்ளனர். உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதனால், கடலூர் மாவட்டம் முழுவதும் சோகத்தில் மூழ்கியுள்ளது.
விபத்தில் உயிர்பிழைத்த மாணவன் விஸ்வேஷிற்கு தரமான சிகிச்சை வழங்க மருத்துவர்களிடம் அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சோக நிகழ்வுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த மாணவர்களுக்கு அப்பகுதி மக்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், பொதுமக்கள் மட்டுமின்றி அந்த மாணவர்களின் நண்பர்களும் தங்களது பெற்றோர்களுடன் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.