Cuddalore Train Accident: கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே நடந்த கோர விபத்தில் ரயில் மீது பள்ளி வேன் மோதியதில் அக்கா, தம்பி உள்பட 3 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் ஓட்டுனர் மீது ரயில்வே துறையும், கேட்கீப்பர் மீது பொதுமக்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
உயிர் பிழைத்த மாணவன் பரபரப்பு பேட்டி:
இந்த நிலையில், இந்த கோர விபத்தில் உயிர் பிழைத்த மாணவர் விஸ்வேஷ் அளித்த பேட்டியில், எங்கள் வீட்டில் இருந்து ஏற்றிக்கொண்டு செம்மங்குப்பம் அருகே கிராஸ் செய்தபோது கேட் மூடப்படவில்லை. சிக்னலும் இல்லை. ட்ரெயின் வரும் சத்தமும் இல்லை. ஹாரன் சத்தமும் இல்லை.
அதனால், ரயில் இல்லை என்று நினைத்துக்கொண்டு ட்ரைவர் வண்டியை ஓட்டினார். திடீரென ட்ரெயின் வந்து மோதியது. அப்போது, நான் மட்டும்தான் சுயநினைவில் இருந்தேன். கேட் கீப்பர் உள்ளேயே உக்காந்து இருந்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
3 மாணவர்கள் மரணம்:
ரயில்வே கேட் மூடிக்கொண்டிருந்ததாகவும், கேட்டை பள்ளி வேன் ஓட்டுநரே திறக்க வலியுறுத்தியதாகவும் ரயில்வே தரப்பு தெரிவித்திருந்த நிலையில், தற்போது உயிர்பிழைத்த மாணவர் விஸ்வேஷ் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பள்ளிவேனை ஓட்டி வந்த ஓட்டுனர் சங்கரும் கேட் திறந்திருந்த காரணத்தாலே வேனை ஓட்டியதாக தெரிவித்துள்ளார்.
இன்று காலை கடலூரில் இருந்து மயிலாடுதுறை நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் கடலூர் துறைமுகம் - ஆலங்குப்பம் இடையே உள்ள செம்மங்குப்பம் அருகே வந்து கொண்டிருந்தபோது தனியார் பள்ளியின் வேன் ரயில் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் பள்ளி வேனில் பயணித்த மாணவர்கள் 4 பேரில் 3 பேர் உயிரிழந்தனர். அவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சாருமதி என்ற மாணவியும், அவரது தம்பியுமான செழியனும் உயிரிழந்தனர். மேலும், நிமலேஷ் என்ற மாணவனும் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
கேட்கீப்பர் கைது:
இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய வகையில், கேட்கீப்பர் பங்கஜ்சர்மா பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பாக ரயில்வே காவல்துறையினரும், தமிழ்நாடு போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் ஒட்டுமொத்த கடலூர் மாவட்டமும் சோகத்தில் மூழ்கியது. அமைச்சர் சிவி கணேசன், கடலூர் மாவட்ட ஆட்சியர், ரயில்வே எஸ்பி, ஐஜி உமா, ரயில்வே துறை அதிகாரிகள் ஆகியோர் நேரில் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும், பாதிக்கப்பட்டோர் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர்.
கேட்கீப்பருக்கு அடி, உதை:
இந்த விவகாரத்தால் கொந்தளித்த செம்மங்குப்பம் மக்கள் கேட்கீப்பர் பங்கஜ்சர்மாவை அடித்து உதைத்தனர். பின்னர், போலீசார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். கடலூர் விபத்தில் மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.