கடலுார்: கடலுார் துறைமுகத்தில் அடிப்படை வசதிகள் முடிக்கப்பட்டு, மீண்டும் சரக்குகளை கையாள தயாராகி வருகிறது.
அனைத்து காலங்களிலும் ஏற்றுமதி, இறக்குமதிக்கு உகந்த துறைமுகம்
கடலுார் துறைமுகம் வங்காள விரிகுடாவில் தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரையில் உப்பனாறு மற்றும் பரவனாறு ஆகிய ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது. ஆசியாவில் உள்ள பழமையான துறைமுகங்களில் இதுவும் ஒன்று. 142 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள துறைமுகம், கரையிலிருந்து ஒரு மைல் துாரத்திலேயே இயற்கையாகவே 15 மீட்டர் ஆழம் இருப்பதால், கப்பல் போக்குவரத்திற்கு ஏற்றதாக உள்ளது. அனைத்து காலங்களிலும் ஏற்றுமதி, இறக்குமதிக்கு உகந்த துறைமுகமாக இது கருதப்படுகிறது.
நடுக்கடலில் நங்கூரமிட்டுள்ள கப்பல்களில் இருந்து சிறுகலங்கள், மிதவைகள் மூலம் சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி செய்யலாம். துறைமுகத்தில், 40 ஆண்டுகளுக்கு முன்பு உரங்கள், நிலக்கரி ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டன. இரும்பு தாது ஏற்றுமதி செய்யப்பட்டன. சிறிய படகுகள் வாயிலாக, பார்ஜ் எனப்படும் மிதவை கொண்டு செல்லப்பட்டு அதில் உள்ள சரக்குகள் கொஞ்சம், கொஞ்சமாக இறக்கி துறைமுகத்திற்கு எடுத்து வரப்பட்டன.
கப்பல் போக்குவரத்தை துவங்க முடிவு
தமிழ்நாடு பெட்ரோ புரொடக்ட் லிட்., கம்பெனியில் ப்ரொப்லின் வாயு இறக்குமதி செய்தபோது, மக்கள் எதிர்ப்பு உட்பட பல்வேறு காரணங்களால் 2002ம் ஆண்டிற்கு பிறகு, துறைமுகத்திற்கு கப்பல் வருகை நிறுத்தப்பட்டது. இதற்கிடையே, கடலுார் துறைமுகத்தில் மீண்டும் கப்பல் போக்குவரத்தை துவங்க முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து 2018ம் ஆண்டு பிப்ரவரியில், மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் சாகர்மாலா திட்டத்தில், கடலுார் துறைமுகத்தை ஆழ்கடல் துறைமுகமாக மேம்படுத்த 135 கோடி ரூபாய் நிதி ஒதுங்கீடு செய்யப்பட்டது.
கப்பல் போக்குவரத்து துவங்கியதும் கடலுார் மாவட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்
அத்துடன் கப்பல் அணையும் தளம், சிமெண்ட் சாலை போன்றவைகள் அமைக்கப்பட்டன. கப்பல்கள் துறைமுகத்திற்கு கொண்டு வருவதற்கும், அதற்கு தேவையான அடிப்படை வசதிகளும் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழக நெடுஞ்சாலைத் துறையின் கீழ் இயங்கும் சிறுதுறைமுகங்கள் துறையும், தமிழ்நாடு கடல்சார் வாரியமும் இணைந்து கடலுார் துறைமுகத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.
மஹதி கடலுார் போர்ட் அண்டு மேரிடைம் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம், துறைமுகத்தை இயக்க முன்வந்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், தலைமை செயலகத்தில் கையெழுத்தானது. வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து கடலுார் துறைமுகத்தில் கப்பல் வருகை இருக்கும் என, ஒப்பந்தம் செய்த நிறுவனம் தெரிவித்துள்ளது. கப்பல் போக்குவரத்து துவங்கியதும் கடலுார் மாவட்ட மக்களுக்கு நேர்முகமாகவும், மறைமுகமாகவும் வேலைகள் அதிகளவு கிடைக்கும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.