தமிழக வெற்றி கழகத்தில் இருந்து, திமுகவிற்கு சென்ற திமுக பெண் பிரமுகர் வைஷ்ணவி, தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜய் மீது, பல்வேறு புகார்களை தெரிவித்துள்ளார்
வைஷ்ணவி அளித்த புகார் என்ன ?
கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று காலை இடையார்பாளையம் பாலாஜி நகர் லட்சுமிபுரம் 4 வது குறிப்பு செந்தமிழ் வசிக்கும், வைஷ்ணவி (வயது 20) கழகத்தினர் மீது அளித்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது: நான் தமிழக வெற்றி கழகம் கட்சியில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உறுப்பினராக இணைந்து மக்கள் பணியை செய்து வந்தேன். சமூக வலைதளங்களிலும் கட்சியின் கொள்கைகளை பரப்பி வளர்த்து வந்தேன்.
ஆபாச வார்த்தைகள் பேசுகின்றனர்
அதன் பிறகு கடந்த மே மாதம் மூன்றாம் தேதி கொள்கை வேறுபாட்டினாலும் மக்கள் பணி செய்ய தடுத்ததாலும் அக்கட்சி நிர்வாகிகளாலும் அதில் இருந்து விலகினேன். இந்தநிலையில் கடந்த ஜூன் 22 ஆம் தேதி திராவிட முன்னேற்ற கழகத்தில் நான் இணைந்து பணிகளை செய்து வருகிறேன். சமூக வலைதளங்களில் மக்கள் நலன் கருதி என்னுடைய கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறேன். ஆனால் கடந்த 3 மாதமாக, தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் என்னைப் பற்றி அவதூறாகவும் ஆபாசன வார்த்தைகளாலும் தரக்குறைவாக விமர்சித்து வருகிறார்கள்.
மேலும் என்னுடைய புகைப்படங்களை மிக மோசமாக சித்தரித்து ரீல்ஸ் ஆகவும் வீடியோவாகவும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் என்னை போன்ற இளம் பெண்கள் அரசியலுக்கு வந்து மக்கள் பணி செய்ய வேண்டும் என்று எண்ணுகிறார்கள். ஆனால் தமிழக வெற்றிக் கழக நபர்களால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன்.
விஜய் மீது நடவடிக்கை எடுங்கள்
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்காக பொறுத்து இருந்தேன். ஆனால் அதைப் பற்றி எந்த ஒரு வார்த்தையும் அவர் பேசவில்லை. இது என்னையும் என்னை போன்ற சிறுவயதிலேயே மக்கள் தொண்டர்கள் அரசியலில், பயணிக்கும் பெண்களையும் நடக்கும் செயலாக உள்ளது. எனக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது . எனவே தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மீதும், அவர்கள் கட்சி தொண்டர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.
இந்த மனுவை மாநகர காவல் துணை ஆணையர் சுகாசினி இடம் அவர் அளித்தார். இது குறித்து போலீசார் விசாரிப்பதாக உறுதி கூறியதாக அவர் தெரிவித்தார்.