தமிழ் மொழி இலக்கிய திறனறிதல் தேர்வில் வெற்றி பெற்று சுமார் ரூ.54 லட்சம் ஊக்கத் தொகை பெற்ற கரூர் தனியார் பள்ளியை சேர்ந்த 149 மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.


 




தமிழ் மொழியில் தலைசிறந்த ஒவ்வொரு வெற்றியாளருக்கும் ரூ.36,000/- வீதம் பரிசுத்தொகை வழங்குவதற்காக தமிழ்நாடு அரசால் மாநில அளவில் நடத்தப்படும் தமிழ்மொழி இலக்கியத் திறனறிதல் தேர்வில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கும் விழா கரூர் அடுத்த வெண்ணமலை பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. 


 




தமிழ் மொழி இலக்கிய திறனறிதல் தேர்வில் 2022-ல் 46 பேர் மற்றும் 2023ல் 103 பேர் என வெற்றி பெற்ற 149 சாதனை மாணவர்களுக்கும், அவர்களுக்கு சிறப்பாக பயிற்சியளித்த பள்ளியின் ஆசிரியப் பெருமக்களுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது.


 




 


இந்நிகழ்ச்சியில் தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் செல்வமணி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். பள்ளியின் முதல்வர் ராமசுப்பிரமணியன் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். 149 வெற்றியாளர்களும் தமிழக அரசிடம் இருந்து மொத்த ஊக்கத்தொகையாக  ரூ. 53,64,000  (ஐம்பத்து மூன்று லட்சத்து அறுபத்தி நான்கு ஆயிரம்) ரூபாய் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.