கடலூர் மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் காவல்துறையினர் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தாழங்குடா, தேவனாம்பட்டினம் மீனவ கிராமங்கள் உள்பட 40 வீடுகளிலும் போலீசார் தீவிர சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.


குற்றவாளிகள் வீடுகளில் ஆயுதங்களை பதுக்கி வைத்து அடிக்கடி கொலை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்ததை அடுத்து, தமிழகம் முழுவதும் கொலை குற்றவாளிகள் மற்றும் பதிவேட்டில் உள்ள குற்றவாளிகளின் வீடுகளில் சோதனை செய்ய டிஜிபி உத்தரவிட்டார்.

 

இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட வீடுகளில் இன்று காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் கொலை வழக்கு நிலுவையில் உள்ள குற்றவாளிகளின் வீடுகளிலும் போலீசார் இந்த சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். 



 

கடலூர் அருகே உள்ள தாழங்குடா, தேவனாம்பட்டினம் மீனவ கிராமங்கள் மற்றும் கடலூர் நகரப் பகுதிகளான திருப்பாதிரிப்புலியூர், புதுநகர் பகுதியில் உள்ள முன்னாள் மற்றும் தற்போது உள்ள குற்றவாளிகளின் வீடுகள் என 40க்கும் மேற்பட்ட வீடுகளில் ஏதேனும் ஆயுதங்கள் பதுக்கபட்டுள்ளதா? என்ற கோணத்தில் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.

 

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. மேலும் புதுவை மாநிலத்திலிருந்து கடலூர் மாவட்டத்தில் ஆயுதங்களை பயன்படுத்தி கொலை சம்பவங்களில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்ததை அடுத்து இந்த சோதனை நடைபெறுவதாக கடலூர் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் கடலூர் நகரப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.