மருங்கூர் அகழாய்வு வரலாறு:


கடலூர் மாவட்டம் மருங்கூரில் தற்போது அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் முன்னதாக இக்கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் விவசாய நிலத்தில் முதுமக்கள் தாழிகள் உள்ளிட்ட பல்வேறு பழங்கால  பொருட்கள் கிடைத்தது. அதன் பின்னர் அவ்விடத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு இரண்டாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த தமிழ் பிராமி எழுத்துகள் கொண்ட பானை ஓடுகள் உள்ளிட்டவை கிடைத்தது. இதனையடுத்து தான் அப்பகுதியில் அகழாய்வு மேற்கொள்ள அரசுக்கு தொல்லியல் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்ததன் பேரில் அங்கு முதற்கட்ட அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கடந்த 2000 ஆம் ஆண்டு மாளிகைமேடு என்னும் பகுதியில் அகழாய்வு செய்யப்பட்ட நிலையில் தற்போது கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வு இதுவாகும்.


மருங்கூரில் முதற்கட்ட அகழாய்வு:


வரலாற்றுக்கு முந்தைய காலம், வரலாற்றுக்காலம் வரையிலான தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அகழ்வாய்வு செய்வதற்கு திட்டமிடப்பட்டது. பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் தொன்மை, பண்பாடு, தொழில் நுட்பம் மற்றும் விழுமியங்களுக்குப் பெருமை சேர்க்கும் வண்ணம் கடந்த ஆண்டு 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து தற்போது 2024 இல் 8 இடங்களில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளது.


குறிப்பாக 1. கீழடி மற்றும் அதன் அருகிலுள்ள தொல்லியல் தளமான கொந்தகை, சிவகங்கை மாவட்டம் - பத்தாம் கட்டம்


2. வெம்பக்கோட்டை, விருதுநகர் மாவட்டம் - 3 ஆம் கட்டம்


3. கீழ்நமண்டி, திருவ்ண்ணாமலை மாவட்டம் - 2 ஆம் கட்டம்


4. பொற்பனைக்கோட்டை, புதுகோட்டை மாவட்டம் - 2 ஆம் கட்டம்


5. திருமலாபுரம், தென்காசி மாவட்டம் - முதல்கட்டம்


6. சென்னானூர், கிருஷ்ணகிரி மாவட்டம் - முதல்கட்டம்


7. கொங்கல் நகரம், திருப்பூர் மாவட்டம் - முதல்கட்டம்


8. மருங்கூர், கடலூர் மாவட்டம் -  முதல் கட்டம் ஆகிய எட்டு இடங்களிலும் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாய்வு பணிகளை மேற்கொள்ள ஜூன் மாதம் காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் துவக்கி வைத்தார். 


அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட வட்டச்சில்லுகள்:


இந்த நிலையில் தான் தற்போதைய அகழாய்வில் வட்டச்சில்லுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து அமைச்சர் தெங்கம் தென்னரசு தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, தமிழர்கள் பொதுவாக ஓய்வு நேரங்களில் தங்களது பொழுதுபோக்கிற்காக உடல் உழைப்பு மற்றும் அறிவு சார்ந்த விளையாட்டுகளை விளையாடுவது வழக்கம். மருங்கூரில் கடந்த வாரம் இராசராசன் காலச் செம்புக்காசு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. தற்போது சுடுமண்ணால் ஆன வட்டச்சில்லுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பெண்களும், சிறுவர்களும் இந்த வட்டச்சில்லுகளை  பயன்படுத்தி விளையாடியுள்ளனர். இந்த விளையாட்டுகள் பாண்டி விளையாட்டு என்று தற்போது அழைக்கப்படுகிறது. இந்த கண்டெடுப்பின் வாயிலாக தற்போது அகழாய்வு செய்யப்படும் இடம் மக்கள் கூடி வாழ்ந்த ஒரு வாழ்விடப்பகுதிதான் என்பது உறுதியாகின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.