பண்ருட்டி பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் பேருந்துகளை திடீர் ஆய்வு செய்தனர்.தனியார் பேருந்து உரிமையாளர்கள், மற்றும் ஓட்டுநர்களுடன் காவல் துறையினர் விபத்து தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடத்தினர்.
கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் என்ற இடத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் உயிரிழந்தனர்.இந்த விபத்தில் இரு பேருந்துகளிலும் பயணித்த 80 க்கும் மேற்பட்டோர் தற்போதும் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோன்று திருக்கண்டேஸ்வரம் பகுதியில் நடந்த மற்றொரு விபத்தில், தாறுமாறாக ஓடிய தனியார் பேருந்து டிராக்டர் மீது மோதியதையடுத்து அப்பகுதி மக்கள் வேகத்தடை அமைக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். தனியார் பேருந்துகள் மற்றும் வானகங்கள் கட்டுப்பாடின்றி வேகமாக செல்வதால் இந்த பகுதியில் விபத்துகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இதை தடுக்க, தேவையான இடங்களில் வேகத்தடை அமைத்திட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வெகுநாட்களாக வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக ஆட்சியர் அருண் தம்புராஜ்க்கும் தனிப்பட்ட முறையில் தகவல் பெறப்பட்டத்தாக தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து நெல்லிக்குப்பம் பகுதியில் தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்க முடிவு செய்து மேல்பட்டாம்பாக்கம், வாழப்பட்டு, வெள்ளக்கேட், வரக்கால்பட்டு, நத்தப்பட்டு, ஆஞ்சநேயர் கோவில் ஆகிய பகுதிகளில் 12 இடங்களில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் விபத்து நடந்த இடத்தில் முதற்கட்டமாக பெரிய அளவிலான வேகத்தடை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது. மேலும் 5 இடங்களில் பெரிய அளவிலான வேகத்தடையும், 6 இடங்களில் சிறிய அளவிலான வேகதடையும் என 12 இடங்களில் உடனடியாக வேகத்தடை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதேபோல வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் தனியார் பேருந்துகள் மற்றும் அரசு பேருந்துகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் பேருந்துகளின் வேகத்தை கட்டுப்படுத்த வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதா என்பதை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
.
கடலூர், பண்ருட்டி தாலுக்காவில் உள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக சாலை விதிகள் மற்றும் விபத்துகளை தவிர்க்கும் விழிப்புணர்வு கூட்டம் வரகால்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது, இந்த விழிப்புணர் கூட்டத்தில் பண்ருட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் சபியுல்லா மற்றும் கடலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரபு கலந்து கொண்டு தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களிடம் நமது மாவட்டத்தில் இனிவரும் காலங்களில் எந்த ஒரு விபத்தும் ஏற்படுத்தாதவாறு மிக கட்டுப்பாடுடனும் குறைந்த வேகத்தில் பேருந்து இயக்க வேண்டும் என பல்வேறு விழிப்புணர்வுகளை வழங்கினர். இந்த கூட்டத்தில் கடலூர் பண்ருட்டி மற்றும் நெல்லிக்குப்பம் ஆய்வாளர்கள் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர்கள் மற்றும் தனியார் பேருந்து சங்க உரிமையாளர்கள், நிர்வாகிகள் மற்றும் ஓட்டுநர்கள் தொழிற்சங்க நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.