சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தேரோட்டம் கோலாகலமாக இன்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சிதம்பரம் நடராஜர் கோயில்
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயில் உலக புகழ் பெற்றது. இங்கு நாள்தோறும் உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வர். சிதம்பரம் கோயிலானது சிவபெருமானின் பஞ்ச சபைகளில் பொற்சபையாகவும், பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாகவும் பார்க்கப்படுகிறது. இந்த கோயிலானது 5 சுற்று பிரகாரங்களை கொண்டது. மனித உடலில் இதயம் இருக்கும் இடத்தைப் போல சிதம்பரம் கோயிலின் மூலவர் கருவறையானது நேர் எதிராக இல்லாமல் சற்று இடப்புறம் தள்ளி அமைந்துள்ளது இக்கோயிலின் சிறப்புகளில் ஒன்றாகும்.
இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் நடைபெறும் ஆரூத்ரா தரிசனமும், ஆனி மாதத்தில் நடக்கும் ஆனி திருமஞ்சன நிகழ்வும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த விழாக்களின் போது மூலவர் நடராஜர் வெளியில் வந்து பக்தர்களுக்கு காட்சிக் கொடுப்பார்.
ஆனி திருமஞ்சன விழா
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன விழா கடந்த ஜூன் 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் பஞ்ச மூர்த்திகளின் வீதியுலாவானது நடைபெற்றது. 21 ஆம் தேதி தெருவடைச்சான் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
காலை 5 மணியளவில் சிறப்பு பூஜைகளுடன் தொடங்கிய தேரோட்ட நிகழ்ச்சியில் நடராஜர், சிவகாம சுந்தரி, விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் தனித்தனியாக தேரில் எழுந்தருளினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்ட திருவிழா சிதம்பரத்தில் களைக்கட்டியுள்ளது.
நாளை ஆனி திருமஞ்சனம்:
முக்கிய நிகழ்ச்சியாக ஆனி திருமஞ்சன விழா நாளை (ஜூன் 26) நடைபெறுகிறது. அன்று அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி - நடராஜர் சுவாமிகளுக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்து மகா அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து காலை 10 மணியளவில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெறும். மதியம் 2 மணிக்கு மேல் ஆனி திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடக்கவுள்ளது.
இதன்பின்னர் ஜூன் 28 ஆம் தேதி இரவு முத்துப்பல்லக்கில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி நடைபெரும் வீதியுலா உற்சவத்துடன் இந்த திருவிழாவானது முடிவடைகிறது.