தமிழ்நாடு முழுவதும் நாளை மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தேர்தல் பறக்கும் படை மற்றும் வருமான வரித்துறையினர்  தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

 

கடலூர் மாநகராட்சியின் மேயராக திமுகவைச் சேர்ந்த கடலூர் மாநகர செயலாளர் ராஜாவின் மனைவி  சுந்தரி செயல்பட்டு வருகிறார். மேயர் சுந்தரியின் கணவர் ராஜா அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தின் தீவிர விசுவாசியாவர். கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து நேற்று கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 45 வார்டிலும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் மிக தீவிரமாக ராஜாவும் அவரது மனைவி சுந்தரியும் ஈடுபட்டனர்.



 

இந்நிலையில், கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போடி செட்டி தெருவில் உள்ள மேயர் சுந்தரி ராஜா வீட்டில் ஓட்டுக்கு கொடுக்க பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் இருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டர்.



 

சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக மேயர் சுந்தரி வீட்டில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நடத்திய சோதனையில் எந்தவித ஆவணங்களும், ரொக்கப் பணமும் கைப்பற்றப் படவில்லை, மேயர் சுந்தரி ராஜா வீட்டில் நடத்தப்பட்ட இந்த சோதனை திமுகவினரின் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மாநகர செயலாளர் ராஜா காழ்ப்புணர்ச்சி நடவடிக்கை என்று தெரிவித்தார். மேலும் அவரது வீட்டில் கட்சிக்காரர்கள் வரத் தொடங்கினர், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.