Lok Sabha Election 2024: தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும், நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.


தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு:


நாடு முழுவதுமுள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கு, மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதில் முதற்கட்டமாக நாளை, தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் உட்பட, 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் மட்டும் 900-க்கும் அதிகமான வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.


தமிழக வாக்காளர்கள்:


தமிழ்நாட்டில் தற்போது 6 கோடியே 23 லட்சத்து 26 ஆயிரத்து 901 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அவர்களில்  3 கோடியே 6 லட்சத்து 2 ஆயிரத்து 367 பேர் ஆண் வாக்காளர்கள்.  3 கோடியே 17 லட்சத்து 16 ஆயிரத்து 69 பேர் பெண் வாக்காளர்கள்.  மூன்றாம் பாலினத்தவர்கள்  8 ஆயிரத்து 465 பேர். மேலும், முதல் முறை வாக்காளர்கள் 10 லட்சத்து 90 ஆயிரத்து 574 பேர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இவர்களுக்கான பூத் சிலிப்கள் கடந்த ஏப்ரல் 1ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13ம் தேதி வரை விநியோகிக்கப்பட்டது. இனி மீதமிருப்பதெல்லாம், வாக்காளர்கள் தங்களுக்கான சரியான வேட்பாளரை தேர்ந்தெடுத்து அவருக்கு வாக்களிப்பது மட்டுமே.  


சோஷியல் மீடியா புலம்பல்:


ஒவ்வொரு முறை தேர்தல் முடிந்த பிறகும், பொதுமக்கள் தங்களது குறைகளை சமூக வலைதளங்களில் கொட்டி தீர்ப்பது என்பது தற்போது வழக்கமாகிவிட்டது. குடிநீர் விநியோகம் சரியில்லை, சாலைகள் முறையாக இல்லை, உட்கட்டமைப்புகள் இல்லை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரவில்லை, வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை, தொகுதி பக்கம் எட்டி பார்ப்பது இல்லை, பிரச்னைகளை காது கொடுத்து கேட்பதில்லை என மக்கள் பிரதிநிதிகள் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறோம். சில சமயங்களில் அரசு திட்டங்களின் உண்மையான நோக்கம் என்ன என்பதே தெரியாமல், சோசியல் மீடியாக்களில் சில திட்டங்களை ஆதரிக்கிறோம். சில திட்டங்களை மோசமாக விமர்சிக்கிறோம்.  


களத்துக்கு போய் ஓட்டு போடுங்க:


அடையாளம் தெரியாத நபரை தேர்ந்தெடுத்துவிட்டு அவரது பதவிக்காலம் முடியும் வரை, புலம்புவதால் எந்த நன்மயும் ஏற்படபோவதில்லை. அதற்கு பதிலாக படித்த, தொகுதி பிரச்னைகளை நன்கு அறிந்த, எளிதில் அணுகக் கூடிய, தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்படக் கூடிய, மக்களின் தேவைகளை உணர்ந்து எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யக்கூடிய, சாதி மத பேதங்களை கடந்த நடுநிலையான தலைமைப் பண்பை கொண்ட ஒரு சரியான வேட்பாளரை தேர்ந்தெடுத்து வாக்களியுங்கள்.


சமூக வலைதளங்களில் விமர்சனங்களை முன்வைப்பது மற்றும் பிரச்னைகளை பொதுவெளியில் அம்பலப்படுத்துவது மட்டுமே உங்களுக்கு தீர்வுகளை வழங்கிவிடாது.  சோசியல் மீடியாக்களை கடந்து களத்திற்கு சென்று வாக்களித்து, சரியான வேட்பாளரை வெற்றி பெறச்செய்வதே உங்கள் பிரச்னைக்கான முறையான தீர்வாகும். நான் வாக்களிப்பதால் மட்டுமே எல்லாம் மாறிவிடுமா என எண்ணி வாக்களிப்பதை தவிர்க்க வேண்டாம். ஏனெனில் ஒவ்வொரு தனிநபரின் வாக்குமே அவசியம் தான்.


சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல, சமூகத்தின் மாற்றத்திற்கும் முன்னேற்றத்திற்கும் ஒவ்வொரு நபரின் வாக்கும் அவசியமாகும். வாக்களிப்பது என்ற அடிப்படை ஜனநாயக கடமையையே நீங்கள் நிறைவேற்றாதபோது, மக்கள் தொண்டு என்ற மாபெரும் கடமையை மக்கள் பிரதிநிதிகள் செய்யாததை கேட்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கும்? என்பதை சிந்தித்து பாருங்கள்.


வாக்குகள் விற்பனைக்கு அல்ல..!


எக்காரணத்தை கொண்டும் உங்களது வாக்குக்காக வேட்பாளர்களிடம் பணம் பெற்று விடாதீர்கள். அரசியலில் மிகப்பெரிய தவறாக கருதப்படும் ஊழலே, வாக்காளர்கள் வாக்கிற்கு பணம் பெறுவதில் இருந்து தான் தொடங்குகிறது. பதவிக்காலம் முடியும் வரை அணுக முடியாமல் இருக்கும் இந்த எம்.எல்.ஏக்களும், எம்.பிக்களும் கூட, தேர்தல் என வந்துவிட்டால் நமது வீட்டு வாசலுக்கே வந்து பெரியோர்களே, தாய்மார்களே என கைகளை கூப்பி வாக்கு சேகரிக்கின்றனர். அதற்கு காரணம் உங்கள் வசமிருக்கும் வாக்குரிமைதான்.


உங்களது வாக்குகள்தான் அவர்களுக்கான பதவியை வழங்குகின்றன. அப்படி வலுவான ஆயுதமான உங்களது வாக்கை,  வெறும் 100, 200 ரூபாய்க்காக விற்றுவிட்டால் அதனால் வெற்றி பெறும் நபர்கள் உங்களுக்கு என்ன நன்மையை செய்துவிடுவார்கள் என்று சிந்தித்து பாருங்கள்? வாக்காளர்களுக்கு அவர்கள் வழங்கும் இந்த பணம் தான், பதவி மற்றும் அதிகாரம் வந்ததும் கொள்ளை அடிப்பதற்கான அவர்களின் முதலீடாகும்.


வாக்களியுங்கள்..! ஜனநாயக கடமையை ஆற்றுங்கள்..!


வாக்களியுங்கள்..! சரியான நபரையே உங்களுக்கான பிரதிநிதியாக தேர்ந்தெடுங்கள்