உலகம் முழுவதும் கடந்த சில நாட்களாக ஓமிக்ரான் எனும் புதிய வகை உருமாறிய கொரோனா வேகமாக பரவி வருகிறது, அதனை தொடர்ந்து வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் கொரோனாவும் வேகமாக பரவ தொடங்கி உள்ளது. இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன, தமிழகத்திலும் இந்த வருடம் தொடங்கியது முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது மேலும் ஞாயிற்று கிழமை தோறும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

 



 

 

 

இதே போல் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து ஒற்றை இலக்கிலேயே இருந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, கடந்த 1 ஆம் தேதி வெறும் 5 நபர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் பத்து நாட்களில் பல மடங்கு உயர்ந்து, நோய் பரவல் வேகமெடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன் 305 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது பின்னர் சற்று பாதிப்பு குறைந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 257 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது இப்படி இருந்து வந்த சூழலில் மீண்டும் கொரோனா பாதிப்பு நேற்று ஒரே நாளில் 317 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

 



 

 

இந்த நிலையில் புவனகிரி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், கடலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான அருண்மொழிதேவன் திட்டக்குடியில் வசித்து வருகிறார். இவருடைய மனைவி பொற்செல்வி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் அவரது மனைவிக்கும், மூத்த மகன் அஜய்க்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதியானது.இதையடுத்து அவர்கள் 2 பேரும் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டனர். இதற்கிடையில் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ.வுக்கும் லேசான காய்ச்சல், இருமல் மற்றும் கொரோனாவுக்கான அறிகுறிகள் இருந்தன. 

 



 

 

எனவே அவர் நேற்று முன்தினம் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அவருக்கு நேற்று முன்தினம் மதியம் பரிசோதனை முடிவுகள் வெளியானது. அதில் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை செய்து வருகின்றனர். ஏற்கெனவே நேற்றையதினம் திமுகவை சேர்ந்த பேராவூரணி எம்.எல்.ஏ அசோக் குமார் மற்றும் திருவையாறு எம்.எல்.ஏ துரை சந்திரசேகர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.