கடலூர் மாவட்டம், பண்ருட்டி பகுதியை சேர்ந்த 50 வயது நபர் அவரது மனைவி, 18 வயது பூர்த்தியாகாத ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த 18 வயது பூர்த்தி ஆகாத மகளை. பெற்ற மகள் என்றும் பாராமல் அந்த தொழிலாளி கடந்த 9.7.2019 முதல் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். இதில் ஒரு கட்டத்தில் அவரது மகள் 7 மாத கர்ப்பிணி ஆனார். இதற்கிடையில் அவரது மகள் வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்ற போது, அங்கேயே அவருக்கு வளர்ச்சி அடையாத குழந்தை இறந்த நிலையில் பிறந்தது. இதை அறிந்த தொழிலாளி, இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி உள்ளார். இதை அடுத்து குழந்தை பிறந்ததால் ஏற்பட்ட ரத்தப்போக்கு காரணமாக, அவரது மகள் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இது பற்றி அவரது தாய் பண்ருட்டி மகளிர் காவல் துறையினரிடம் புகார் செய்தார்.
அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, சிறுமியின் 50 வயது தந்தையை கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி எழிலரசி பரபரப்பு தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், இவ்வழக்கில் தொழிலாளி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்தும், ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார்.
மேலும் பாதிக்கப்பட்ட 18 வயது பூர்த்தி அடையாத அந்த சிறுமிக்கு மாவட்ட சமூக பாதுகாப்புத்துறையின் சமூக நல நிதியில் இருந்து ரூ.6 லட்சம் இழப்பீடாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் 30 நாட்களுக்குள் வழங்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலாசெல்வி ஆஜராகி வாதாடினார். பின்னர் இது குறித்து அரசுத் தரப்பு வழக்கறிஞர் எஸ்.கலாசெல்வி கூறுகையில் பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த அவமானத்தை பணத்தால் ஈடுகட்ட முடியாது. எனவேதான் அவருக்கு இயற்கை மரணம் அடையும் வரை சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா். மேலும், அவா் மேல்முறையீடு செய்தால், அவருக்கு தண்டனை குறைப்போ, தண்டனையை மறுபரிசீலனை செய்யவோ கூடாது என்றும், தண்டனைக் காலத்தில் அவரது வயது, நோய், நன்னடத்தை ஆகியவற்றைக் காரணம் காட்டி, இறப்புக்கு முன்பாக விடுதலை செய்யவும் கூடாது என்றும் நீதிபதி தனது தீா்ப்பில் குறிப்பிட்டதாகத் தெரிவித்தாா்.