கருணாநிதி இருந்திருந்தால் கூட பாஜகவில் கூட்டணி வைத்திருப்பார் என பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும் நடிகருமான ராதாரவி தெரிவித்துள்ளார். 


மதுரையில் பாஜக சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழா நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ராதாரவி அப்பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசிய ராதாரவி, “முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தற்போது இருந்திருந்தால் கூட மத்திய பாஜக அரசில் இடம் பெற்றிருப்பார். 


தற்போது பாஜகவில் 4 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அடுத்து 80 எம்.எல்.ஏக்கள் இருப்பார்கள். பாஜக ஆட்சியை பிடிக்க வேண்டியதில்லை. ஆனால் பாஜகவை கேட்டுதான் ஆட்சி நடக்கும். தற்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்வோம் என கூறியவர் தற்போதைய முதல்வர் ஸ்டாலின். தற்போது அவரை அருகில் வைத்திருக்கிறீர்கள். மாநில அரசு மத்திய அரசை நோக்கி கையேந்தி தான் ஆக வேண்டும். பிரதமர் மோடி கடந்தமுறை வந்த போது கோ பேக் என பலுான் பறக்க விட்டவர்கள், ஜனவரி 12ஆம் தேதி பிரதமர் வரும் போது பறக்க விடுவார்களா?” என கேள்வி எழுப்பினார். 


முன்னதாக 2022-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட புதிய மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழா நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொண்டு கல்லூரிகளைத் திறந்துவைக்க பிரதமர் மோடி ஜனவரி 12-ம் தேதி விமானம் மூலம் சென்னை வர இருக்கிறார். மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ஒன்றில் முதலமைச்சர் ஸ்டாலினும் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 




அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு முறை பிரதமர் தமிழகம் வரும்போது கோ பேக் மோடி ஹேஷ்டேக் ட்ரண்ட் செய்யப்படும். மேலும், பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் எதிர்க்கட்சியாக இருந்த திமுக போராட்டம் நடத்தும். கருப்பு பலூன் பறக்கவிடும். 


இதையடுத்து தற்போது திமுக ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். இப்போது திமுக என்ன நிலைப்பாடு எடுக்கும் எனக் கேள்வி எழுந்தது. இதுதொடர்பாக பேட்டியளித்த திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு திமுக ஏன் கருப்புக்கொடி காட்ட வேண்டும்? எதிர்க்கட்சியாக இருந்தபோது நாங்கள் அவருக்கு கருப்புக்கொடி காட்டினோம். ஆனால் இப்போது நாங்கள் அவரை விருந்தினராக அழைத்திருக்கிறோம். நாங்களே அழைத்துவிட்டு நாங்களே கருப்புக்கொடி காட்டினால் அது எந்த விதத்தில் நியாயம்.


எங்களுக்கு எதிராக அவர் ஏதாவது பேசியிருந்தால் அப்போது நாங்கள் அவரை தவிர்த்திருப்போம். பிரதமர் மோடி எங்களுக்கு எதிரி அல்ல, இந்துத்துவா தான் எதிரி. அதிமுகவைப் போல அவர்கள் சொல்வதற்கெல்லாம் நாங்கள் தலையாட்டுவதில்லை. திமுக தன்மானத்தோடு நடந்துகொள்கிறது” எனத் தெரிவித்திருந்தர்.