பொதுவாக பள்ளி கல்லூரிகளில் ஒன்றாக படித்த மாணவர்கள் பள்ளி அல்லது கல்லூரி முடிந்து சில ஆண்டுகள் அல்லது பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றாக படித்த அனைவரும் மீண்டும் ஒன்று கூடி தங்களுடன் படித்த சில காலங்கள் வாழ்ந்த நண்பர்களை மீண்டும் சந்திப்பது வழக்கம், இதனை ரியூனியன் அல்லது அலுமினி எனக் கூறுவார்கள்.  இதேபோல் கடலூர் மாவட்டத்தில் கடந்த 1986ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாடு சிறப்புக் காவலர் பணியில் சேர்ந்த காவலர்கள் 37 ஆண்டுகள் கழித்து சந்திப்பு நிகழ்ச்சி கடலூரில் நடைபெற்றது இதில் கடலூர் விழுப்புரம், சென்னை, திருச்சி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பணிபுரியும் மற்றும் ஓய்வு பெற்ற காவலர்கள் கலந்து கொண்டு தங்களது அன்பை வெளிப்படுத்திய நிகழ்வு அரங்கேறி உள்ளது.

 



 

கடலூர் கம்மியம்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் 1986ஆம் ஆண்டு ஒன்றாக பணி புரிந்த காவலர்கள் கலந்து கொண்டனர். அப்பொழுது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட காவலர்கள் முதலில் தங்களோடு பணி புரிந்து பணியின் பொழுது இறந்த மற்றும் ஓய்வு பெற்றபின் இறந்த தங்களது சக நண்பர்களுக்கு அனைவரும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவர்கள் பேசுகையில் இவ்வளவு காலம் நாம் பிரிந்து இருந்தோம் என நினைக்கும் பொழுது மனதிற்கு சங்கடமாக உள்ளது. 

 



 

கடந்த ஆண்டுகளில் நம் உருவங்கள் நிறங்கள் என எல்லாம் மாறி இருந்தாலும் 37 வருடங்கள் கழித்து மீண்டும் ஒன்றாக பணி புரிந்த நண்பர்களை ஒன்று சேரக் காண்பது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது, இனிவரும் காலங்களில் வருடா வருடம் இதே போல் நாம் அனைவரும் ஒன்று கூட நண்பர்கள் ஒத்துழைப்பு தந்து வருடா வருடம் இந்த நிகழ்வினை நடத்த வேண்டும் எனவும், 86 க்கு பிறகு ஒன்றாக பணி புரிந்து நம் அனைவருக்கும் திருமணமாகி குழந்தைகள் பெற்று, மருமகள் மருமகன் என கிடைத்து, ஒரு சில பேர் பேரன் பேத்திகள் எடுத்து இருந்தாலும் அந்த எல்லா மகிழ்ச்சியைக் காட்டிலும் இவ்வாறு பழைய நண்பர்கள் ஒன்று சேர்ந்து இருப்பது அதைவிட பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது எனவும் நெகிழுந்து பேசினர்.

 



 

'96' திரைப்படத்தில் வருவது போல ஒன்றாக படித்த மாணவர்கள் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் பேசி ஒன்று கூடுவது போல, 37 வருடங்கள் கழித்து ஒன்றாக பணி புரிந்த காவலர்கள் மீண்டும் ஒன்று கூடிய அந்த நிகழ்வு காண்போர் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.