தமிழ்நாடு முழுவதும் நாளை மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ள நிலையில், அதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
கொரோனா எனும் கொடிய நோயிலிருந்து தற்காத்து கொள்ள, தற்போது தடுப்பூசி ஒன்றே தீர்வாக உள்ளது. கொரோனா இரண்டாம் அலையால் ஏற்பட்ட பெரும் பாதிப்பிற்கு பிறகு, கொரோனா தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெறுகிறது. ஜூன், ஜூலை மாதங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது தடுப்பூசி கிடைக்கப்பெற்று 18 வயது நிரம்பியவர்களுக்கு போடப்பட்டு வருகிறது. இருப்பினும், சிலர் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளாமல் உள்ளனர். அவர்களுக்காகவும், பணிக்காரணமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளமால் இருப்பவர்களுக்காகவும், கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு கட்டமாக தமிழ்நாடு முழுவதும் நாளை 10,000 முகாம்கள் நடத்தி கொரோனா தடுப்பூசி செலுத்த தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதில், சென்னையில் மட்டும் 1,600 முகாம்கள் நடத்தப்படுகிறது. மூன்றரை லட்சம் தடுப்பூசிகள் செலுத்த சென்னை மாநகராட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்தப் பணிகளில் 600 டாக்டர்கள், நர்ஸ்கள் ஈடுபடவுள்ளனர். சிறப்பு முகாமிற்கான ஏற்படுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் நாளை (செப்டம்பர் 12) மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ள நிலையில், அதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், சிஎஸ்கே அணியின் பந்துவீச்சாளர் பாலாஜி, வீரர்கள் ஜெகதீசன், சாய் கிஷோர், ஹரி நிஷாந்த் ஆகியோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.