கரூர் மாவட்டத்தில் உள்ள மிக முக்கிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியாக பாலவிடுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. கடவூர், பாலவிடுதி, முள்ளிப்பாடி, மாதனூர், தரகம்பட்டி, செம்பியநத்தம் உள்ளிட்ட 8 வருவாய் கிராம பஞ்சாயத்துக்களில் உள்ள 4,750 உறுப்பினர்கள் இந்த வங்கியில் வங்கி கணக்கு வைத்துள்ளனர். கூட்டுறவு சங்கத் தலைவராக கடவூர் ஊராட்சி ஒன்றிய தலைவராக உள்ள செல்வராஜும், செயலாளராக மாரிமுத்துவும் பொறுப்பில் இருந்து வருகின்றனர்.
பாலவிடுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் தலைவர் செல்வராஜ்
இந்த வங்கியில் கடந்த 2013 முதல் 2021 வரை கொடுக்கப்பட்ட பயிர்க்கடன், விவசாய நகைக்கடன் உள்ளிட்டவை வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக தொடந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. தகுதியுள்ள நபர்களுக்கு கடன்களை வழங்காமல், கூட்டுறவு வங்கித்தலைவர் செல்வராஜ் மற்றும் செயலாளர் மாரிமுத்து ஆகியோர் இணைந்து விவசாயக்கடன் பெற தகுதியில் இல்லாத தனது உறவினர்கள், ஆதரவாளர்கள், அரசுப்பணியில் இருப்பவர்கள், நிலமே வைத்திருக்காதவர்களுக்கு கூட்டுறவு கடன்களை வங்கியதுடன் அரசின் சார்பில் அந்த கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு 2.60 கோடிக்கும், 2021 ஆம் ஆண்டில் 7.20 கோடிக்கும் விவசாயக்கடன்கள் அரசின் சார்பில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் 3 கோடி ரூபாய் வரை தகுதி இல்லாத நபர்களுக்கு இந்த கடன்களை தள்ளுபடி செய்ததாக அப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
பாலவிடுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் செயலாளர் மாரிமுத்து
கூட்டுறவு சங்க தலைவராவன செல்வராஜுக்கு சொந்தமான தரகம்பட்டி எஸ்.கே.வி மேல்நிலைப்பள்ளின் பங்குதாரரான குழந்தைவேலு மற்றும் அவரின் மனைவி அரசு பள்ளி ஆசிரியை ராஜலட்சுமி பெயரிலும், பாலவிடுதி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி காவலாளியாக பணியாற்றும் நிலமே இல்லாத சுப்பிரமணி மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரிலும் பயிர்க்கடன்கள் வாங்கப்பட்டு அதனை தள்ளுபடியும் செய்துள்ளனர். மேலும் பாலவிடுதி, சிங்கம்பட்டி கிராமங்களில் தகுதி இல்லாத அதிகப்படியான பயனாளிகளுக்கு பயிர்க்கடன் வழங்க கையூட்டு பெற்றதாகவும் இவர்கள் மீது தொடர் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் செல்வராஜ்
அதிமுக இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த 2016ஆம் ஆண்டுக்கு பின் கூட்டுறவு சங்கத் தலைவர் செல்வராஜின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. அவருக்கு சொந்தமாக தரங்கம்பட்டியில் எஸ்.கே.வி பள்ளி, 300 ஏக்கரில் நிலங்கள் என தனது பதவிக்காலத்தில் முறைகேடாக சொத்துகளை சேர்த்த நிலையில் கடவூர் ஊராட்சி ஒன்றியத் தலைவராவும் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தீவிர ஆதரவாளராகவும் இருந்த செல்வராஜ், தற்போது மின்சாரத்துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜியின் முன்னிலையில் திமுகவில்தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டுள்ளார்.
செல்வராஜின் வங்கி மோசடிகள் குறித்து முதல்வரின் தனிப்பிரிவு, கூட்டுறவுத்துறை அமைச்சர், லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் அனுப்பிய நிலையில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. முறைகேட்டில் ஈடுபட்ட கூட்டுறவு சங்கத் தலைவர் செல்வராஜ், கூட்டுறவு சங்கத் செயலாளர் மாரிமுத்து மீதும் உரிய விசாரணை மேற்கொண்டு துறை ரீதியாக கடுமையான நடவடிக்கை வேண்டும் என கரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தன் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலர் மாரிமுத்துடம் கேட்டபோது, நான் எந்த மோசடியிலும் ஈடுபடவில்லை. நீங்கள் வேண்டும் என்றால் ஆய்வு செய்து கொள்ளுங்கள். கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த பட்டா, சிட்டா உள்ளிட்ட ஆவணங்களை பயன்படுத்திதான் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டு அக்கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
இந்நாள் மின்சாரத்துறை அமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்த செல்வராஜ்
இது குறித்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவரும், அதிமுகவிலிருந்து கடவூர் ஊராட்சி ஒன்றியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது திமுகவில் இணைந்து உள்ள செல்வராஜிடம் கேட்க முற்பட்டபோது, தொலைபேசியை எடுக்கவில்லை. இந்த மோசடியில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே கடந்த 10 ஆண்டுகளாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவராகவும், கடவூர் ஊராட்சி ஒன்றியத் தலைவராக இருந்த அதிமுகவை சேர்ந்த செல்வராஜ், தற்போது திமுகவில் இணைந்து உள்ளார் என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.