அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உட்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் அறப்போர் இயக்கம் மற்றும் தி.மு.க.வின் ஆர்.எஸ் பாரதி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு 2018ஆம் ஆண்டில் அனுப்பிய புகாரின் அடிப்படையில்  எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான 52 இடங்களில் இன்று (10 ஆகஸ்ட் 2021) லஞ்சஒழிப்புத்துறை போலீசார் ரெய்டு நடத்தினார்கள். வேலுமணி உட்பட அவர் தொடர்புடைய 17 பேர் மீது நேற்று (09 ஆகஸ்ட் 2021)  லஞ்ச ஒழிப்பு எஸ்.பி.  கங்காதாரன் குற்றமுறையீடு செய்ததன் அடிப்படையில் புகார் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.


அதையடுத்து வேலுமணிக்குச் சொந்தமாக கோவையில் உள்ள 35 இடங்களிலும் திண்டுக்கலில் உள்ள ஒரு இடத்திலும் சென்னையில் உள்ள 15 இடங்களிலும் மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு இடத்திலும் ரெய்டு நடத்தப்படுகிறது. ’வேலுமணி அதிமுக அமைச்சரவையின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த காலத்தில் தன்னுடைய சகோதரரான அன்பரசன் மற்றும் அவர்கள் இயக்கும் நிறுவனங்களுக்கு நூற்றுக்கனக்கான கோடி ரூபாய் அளவில் டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டரில் பல முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன. வேலுமணி தனக்கும் தனக்குச் சார்ந்தவர்களுக்கும் ஆதாயம் தேடும் வகையில் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார்’ என அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரில் பதிவு செய்யப்பட்டுள்ளது அதன் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் குறிப்பிட்டுள்ளார். 



முன்னாள் உள்ளாட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சொந்தமான இடங்கள் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை முதல் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை குனியமுத்தூரில் உள்ள இல்லம், சென்னையில் வேலுமணி தங்கி இருக்கும் சட்டமன்ற  உறுப்பினர்கள் விடுதி உள்ளிட்ட 53 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வரும் நிலையில் விடுதியில் தங்கி இருக்கும் எஸ்.பி.வேலுமணியிடமும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் இடையகோட்டை அருகே சின்னக்காம்பட்டி புதூர் கிராமத்தில் எஸ்.பி.வேலுமணி உறவினரும் துணை ஆட்சியராக இருக்கும் மதுராம்பிக்கையின் தந்தை வீடான சதாசிவத்தின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.