நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா உயிரிழப்புகளின் காரணமாக சென்னை போன்ற பெருநகரங்களில் உடல்களை அடக்கம் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது. மாலை 6 மணிவரையில் மட்டுமே இயங்கிக்கொண்டிருந்த இடுகாடுகளை நள்ளிரவு வரை நீட்டிப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு , வீட்டு தனிமையில் வைக்கப்பட்டிருப்பவர்களை கண்காணிக்க மருத்துவ இறுதியாண்டு மாணவர்கள் 300 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களுக்கு கட்டுப்பாட்டு மையங்களில் பணி வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் தனிமையில் உள்ள நோயாளிகளின் உடல்நிலை. ஆக்சிஜன் அளவு, உணவுமுறை உள்ளிட்டவற்றை கேட்டறிவதோடு நோயாளிகளின் சந்தேகங்களுக்கும் பதில் அளிப்பார்கள். மாணவர்களின் பணிகளை நேரில் பார்வையிட்ட சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், " இடுகாடுகளில் 24 மணிநேரமும் உடல்களை தகனம் செய்வதில் சிக்கல் உள்ளது , அவ்வாறு செய்தால் தகன இயந்திரம் பழுதடைந்துவிடும். பராமரிப்பு பணிகளை தினமும் முடித்த பின்னர்தான் இயந்திரம் மறு இயக்கம் செய்யப்படும்” என தெரிவித்தார்.
அத்துடன் மக்கள் காலியாக உள்ள இடுகாடுகளை இணையம் வாயிலாக அறிந்துக்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு தகவல் தொழில்நுட்ப துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த வசதியானது துரித நடைமுறையில் பயன்பாட்டிற்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் மயானங்களை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் வைக்கும் பொருட்டு , சென்னையில் உள்ள அனைத்து மயானங்களிலும் சிசிடிவி பொருத்தும் பணிகள் நடைப்பெற்றுவருகின்றன. அதிகாரிகள் தங்கள் செல்போன் மூலம் அவற்றை கண்காணிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுவரையில் 15-ஆக இருந்த ஊரடங்கு அமலாக்க குழுக்களின் எண்ணிக்கை தற்பொழுது 30-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நெறிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களுக்கு அபராதம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ககன் தீப் சிங் தெரிவித்தார். இதுவரையில் 239 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதாக தெரிவித்த அவர், 1.44 கோடி ரூபாய் அபராதம் பெறப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இதே போல கடந்த 8ஆம் தேதியில் இருந்து இன்று வரை சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 70 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் நேற்று ஒரே நாளில், 1,727 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 2,709 பேர் மீது வழக்குகள் பதியப்பட்டன. விதிகளை மீறி விற்பனையில் ஈடுபட்ட 120 கடைகளுக்கு போலீஸார் உதவியுடன் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர் .