மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்‌ அதிகாரப்பூர்வ டுவிட்டர்‌ கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.


இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில், “CPIM TamilNadu‌ அதிகாரப்பூர்வ டுவிட்டர்‌ கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.


 






அதை மீட்பதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறன. தற்போது ஏதாவது கட்சிக்கு தொடர்பற்ற பதிவுகள் வெளியானால் அதை ஒதுக்கிட வேண்டுகிறோம்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார். கடைசியாக, வீரவெண்மணி நடைபயணம் குறித்து அதன் ட்விட்டர் கணக்கில் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.


சமீபத்தில்தான், தமிழ்நாட்டின் உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோரின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. அதேபோல, நடிகர் கார்த்தியின் ஃபேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டது.


அதுமட்டுமின்றி, நாட்டின் தலைநகரான டெல்லியில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் நோயாளிகள் மற்றும் அவர்களது நோயின் தன்மை குறித்த தகவல்கள் அடங்கிய எய்ம்ஸ் மருத்துவமனையின் சர்வர் ஹேக்கர்களால் முடக்கப்பட்டது.


முதலில் சர்வர் மிகவும் மந்தமாக செயல்படுகிறது. சிறிது நேரத்தில் சரி செய்து விடலாம் என நினைத்த டெக்னீசியன்ஸ்-க்கு, அதன் பின்னர் தான் சர்வர் ஹேக் செய்யப்பட்டது தெரியவந்தது. 


ஹேக் செய்யப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையின் சர்வரை திரும்ப ஒப்படைக்க ஹேக்கர்கள் 200 கோடி ரூபாய் கிரிப்டோகரன்சி தர வேண்டும் என பேரம் பேசினர். 


 






எய்ம்ஸ் மருத்துவமனை சர்வரில் முன்னாள் பிரதமர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள், நீதிபதிகள் உட்பட நாட்டின் குடிமக்களில் சுமார் மூன்று முதல் நான்கு கோடி பேரின் தரவுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 


எய்ம்ஸ் மருத்துவமனையின் சர்வர் ஹேக் செய்யப்பட்டது போலவே, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் சர்வரை ஹேக் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அது தோல்வியில்தான் முடிவடைந்தது.