குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை.
கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் லேசான மழை பெய்தது. தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாகப்பட்டினத்திற்கு கிழக்கே 470 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. இதனால் குமரி கடலை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை அறிவித்திருந்தது. இந்நிலையில் கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டமாக இருந்தது. கரூர் டவுன், வெள்ளியணை, வாங்கல், வேலாயுதம்பாளையம், பசுபதிபாளையம், திருமாநிலையூர், வெங்கமேடு, தான்தோன்றிமலை, சுக்காலியூர், செல்லாண்டிபாளையம், தோரணக்கல்பட்டி, காந்திகிராமம், சணப்பிரட்டி உள்ளிட்ட கரூர் சுற்றுவட்டாரம் மற்றும் மாவட்டத்தின் இதர பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் விட்டுவிட்டு மழை பெய்தது.
கரூர் மாவட்டத்தில் காலை முதல் அவ்வப்போது வெயிலும் காணப்பட்டது. திடீர் திடீரென்று சாரல் மழை பெய்தது. கரூரில் மாலை இருபது நிமிடம் தொடர்ந்து மழை பெய்தது. இதன் காரணமாக பஸ் நிலையம் சேரும் சகதியுமாக காணப்பட்டது. கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்து பணியிடங்களுக்கு செல்ல வந்தவர்கள் சாரல் மழையில் நனைந்தபடி பஸ்களில் ஏறி செல்ல சிரமப்பட்டனர். சாரலாகவே மழை பெய்தாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படதான் செய்தது.
கிருஷ்ணராயபுரத்தில் மழையின் நிலவரம்.
கிருஷ்ணராயபுரத்தை அடுத்த லாலாபேட்டை, வல்லம், மேட்டுப்பட்டி, வரகூர், வயலூர், மகாதானபுரம் ஆகிய இடங்களில் பரவலாக சாரல் மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.