பிபிஇ கிட், மாஸ்க் எல்லாம் கேரளா கொரோனா வைரஸால்தான் பயன்படுத்தத் தொடங்கியது என நினைக்க வேண்டாம். அவர்களை அதற்கு முன்னதாகவே நிபா வைரஸ் பதம் பார்த்துச் சென்றது. அப்போது தொட்டு பொது சுகாதாரத்தைப் பேணுவதில் மிகச் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார் ஷைலஜா டீச்சர். சுகாதாரத் துறை அமைச்சராக அவரின் செயல்பாடுகள் மாநில மக்களின் பாராட்டையும் சர்வதேச அமைப்புகளின் பார்வையையும் பெற்றது. அதனாலேயே நடந்து முடிந்த கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் ஷைலஜாவுக்கு மக்கள் வாக்குகளை வாரி வழங்கினர். மக்களின் நம்பிக்கை தான் வாக்குகளாக மாறும் என்பதை நிரூபித்து 61,035 வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றி பெறச் செய்தனர். கேரள சட்டப்பேரவைத் தேர்தல் வரலாற்றிலேயே இதுவே அதிகபட்ச வெற்றி வாக்கு வித்தியாசம். ஆனால், அந்த வரலாற்றுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்னொரு வரலாற்றால் பதில் சொல்லியிருக்கிறது. கட்சியின் இந்த வரலாறு தான் இப்போது ஊடகங்களில் விவாதப் பொருளாகவும் ஆகியிருக்கிறது.


1987 கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் கவுரியம்மா (அண்மையில் மறைந்த அரசியல் ஆளுமை) சிபிஎம்மின் முதல்வர் வேட்பாளராக முன்நிறுத்தப்பட்டார். ஊர் முழுவதும் அவரை முதல்வராக அறைகூவல் விடுத்து போஸ்டர்கள் அலங்கரித்தன. மேடைகளிலும் கட்சியினர் தாராளமாக முழங்கினர். தேர்தல் முடிவுகளும் சாதகமாகவே வந்தன. ஆனால் மக்கள் தீர்ப்புக்கு மாறாக இ.கே.நாயனார் முதல்வராக்கப்பட்டார். கவுரியம்மா ஓரங்கட்டப்பட்டார். இப்போது ஷைலஜா ஓரங்கப்பட்டிருக்கும் சூழலும் அப்போது கவுரியம்மா ஓரங்கட்டப்பட்ட சூழலலும் சமமானது. வரலாறு தனது பிழையை மீண்டும் நிகழ்த்தியிருக்கிறது. கவுரியம்மாவின் அரசியல் வாழ்வையும், ஷைலஜாவின் அரசியல் பயணத்தையும் நிச்சயமாக சமமாக பாவிக்க முடியாது. ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இந்த இரு பெண்களுக்கும் நேர்ந்த அவலத்தை சமமாக பாவிக்கலாம். அதனாலேயே வரலாற்றுப் பிழை மீண்டும் நிகழ்ந்திருப்பதாக சொல்ல முடிகிறது.


கட்சி எடுத்த முடிவை ஷைலஜா டீச்சர் கொள்கை முடிவு புன்முறுவலுடன் கடந்து செல்லலாம். ஆனால், நெருக்கடியான காலகட்டத்தில் அரசுக்கு தோள் கொடுத்து தாங்கிநின்ற அவருக்கு தனிப்பட்ட முறையில் இதை ஏற்றுக்கொள்வது நிச்சயமாகக் கடினமான ஒன்றாகவே இருக்கும். அதை உணர்ந்தே வாக்களித்த மக்கள் எங்களுக்கு ஷைலஜா டீச்சர் அமைச்சராக வேண்டும் என்று குரல் எழுப்பிவருகின்றனர்.


புதுமுகங்களுக்கு வாய்ப்பு என்ற போர்வையிலேயே கட்சி ஷைலஜாவை ஓரங்கட்டியிருக்கிறது.  புதுமுகங்கள் அதற்குத் தகுதியானவையாக இருந்தாலும் கூட புதியவர்கள் என்பதால் அரசுக்கு விசுவாசமாக இருப்பதையே முதல்பணியாகக் கொள்வர் என்பதில் ஐயமில்லை. முன்னாள் கல்வியாளர், மேயர் ஆர்.பிந்து, முன்னாள் பத்திரிகையாளர் வீணா ஜார்ஜ், முன்னாள் விளையாட்டு வீராங்கனை சின்சு ராணி என்ற மூன்று முகங்களுமே தனிப்பட்ட முறையில் ஆளுமைகள்தான். ஆனால், அவர்கள் அனைவரும் தங்களின் திறனை நிரூபித்து மக்களின் பொது செல்வாக்கைப் பெற மிக நீண்ட காலம் தேவைப்படும். ஆனால், இப்போதைய நிலவரத்தில் ஷைலஜா இந்த மூன்று பெண் ஆளுமைகளைவிட அனுபவம் நிறைந்தவராக இருக்கிறார். கடந்த 5 ஆண்டுகளில் ஒரு சுகாதாரத் துறை அமைச்சராக அவர் ஆற்றிய கடமைக்கும் ஈடு இணையில்லை. ஒருவேளை அவரின் திட்டமிடுதல் தொலைநோக்குப் பார்வை இல்லாவிட்டால் நிபா வைரஸால் கோழிக்கோடு அப்போதைய வூஹான் ஆகியிருக்கும் என்பதில் ஐயமில்லை. அவர் தனக்குக் கீழ் வேலை செய்யும் அதிகாரிகள் குழுவை நேர்த்தியாக தேர்வு செய்து ஒரு குழுவாகவே இயங்கினார். அவரின் பணிகளை ஒன் உமன் ஷோ என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. ஆனால், சுழன்று பணியாற்றும் ஒருமித்த எண்ணம் கொண்ட செயற்குழுவை தேர்வு செய்ததில் ஒற்றை மனுஷியாக அவர் சாதனைப் பெண்.


அறிவியல் ஆசிரியராக இருந்து அரசியல் ஆளுமையாக மாறி இன்று பிரியமாக ஷைலஜா டீச்சர் என அழைக்கப்படும் அவர் கேரளப் பெண்கள் மட்டுமல்ல இந்தியப் பெண்கள் அனைவருக்குமே ஒரு முன்மாதிரியாக இருக்கிறார்.


ஓரங்கட்டப்படுதலின் பளிச் பின்னணி..


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் பெண்கள் ஓரங்கட்டப்படுவது தொடர்ந்து வெளிப்படையாகவே நடக்கிறது என்பதற்கு நிறையவே சான்றுகள் இருக்கின்றன. கரோனா வைரஸ் கேரளாவில் வேகமெடுத்த வேளையில் ஷைலஜாவின் திறனும் அதன்மீதான அபிமானமும் வைரலானது. அந்த நேரத்தில் சரியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டாரோ பினராயில் என்று இப்போது யோசித்துப் பார்க்கும்படி அன்றாட கரோனா அப்டேட்களை சொல்லவந்தார் பினராயி. ஷைலஜாவின் ஹிட் பிரெஸ் கான்ஃபெரன்சகள் முடிவுக்கு வந்தன. பினராயில் புள்ளிவிவரங்களைச் சொல்ல ஷைலஜா ஓரமாக அமைதியாக அமர்ந்திருப்பார். தன் சக தோழர் ஓரங்கட்டப்படுவதை சலனமில்லாமல் பினராயியும் சகித்துக் கொண்டே இருப்பார். ஓர் ஆளுமையை தலைமையில் நிழலாக செயல்படவைப்பது சிபிஎம் கட்சியின் கைவந்த கலை போல என்று எண்ணும் அளவிற்கே நடப்பவை உள்ளன. 1994-இல் கட்சியின் மிகப்பெரிய பெண் ஆளுமை கவுரியம்மா கட்சியிலிருந்து நீக்கப்பட்டதை நினைவுகூராமல் இருக்க இயலாது.