எம்.பியாக இருந்து பின்னர் ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு ஆளுநராக செயல்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி பதவியை அலங்கரிக்க இருக்கிறார். தமிழகத்தில் பாஜக காளுன்ற திணறிவரும் சூழலில் தமிழக மக்களின் கவனத்தை ஈர்க்க சி.பி ராதாகிருஷ்ணனின் முகம் உதவலாம் எனக் கூறப்படுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த சி.பி ராதாகிருஷணன் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய நாட்டின் குடியரசு துணைத்தலைவராக பதவி வகித்து வந்த ஜெகதீப் தன்கர் திடீர் ராஜினாமா செய்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அடுத்த குடியரசு துணைத்தலைவர் யார் என்ற கேள்வி எழத் தொடங்கியது. இந்நிலையில் இந்த ரேஸில் பாஜகவின் மூத்த தலைவர்கள் முதல் காங்கிரஸை சேர்ந்த ஒருவர் இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியானது. இந்த நிலையில் தான் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக  மகாராஷ்டிரா ஆளுநரும் தமிழகத்தை சேர்ந்தவருமான சி.பி ராதாகிருஷணன் போட்டியிடுவார் என பாஜக தலைவர் ஜே.பி நட்டா அறிவித்துள்ளார். சி.பி.ராதாகிருஷ்ணனை வேட்பாளராக அறிவிக்கும் முடிவை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் எடுத்துள்ளனர்.

பாஜகவில் சேர்ந்து கடுமையாக உழைத்து படிப்படியாக உயர்ந்து, அக்கட்சியின் மாநில தலைவர் பொறுப்பை வகித்தார் சி.பி ராதாகிருஷணன்.  இவர் பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்த காலத்தில், கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை 19,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரத யாத்திரை நடத்தினார். தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியை வளர்க்கவும், வலுப்படுத்தவும் இந்த யாத்திரை ஊக்கமாக அமைந்தது. 

கொங்கு மண்டலத்தில் தனக்கென தனி செல்வாக்கை சி.பி. ராதாகிருஷ்ணன் உருவாக்கிக் கொண்டார். அதன் விளைவாக, 1988 கோவை குண்டுவெடிப்பிற்கு பிறகு 1998 மற்றும் 1999 பொதுத்தேர்தல்களில் பாஜக சார்பில் போட்டியிட்டு பிரமாண்ட வெற்றி பெற்று பலரையும் வியப்பில் ஆழ்த்தினார்.  குறிப்பாக பாஜக அதிமுக கூட்டணி சார்பாக 1998-ல் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு சுமார் 1,50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பின் ஒரு வருடத்தில் ஆட்சி கலய பாஜக திமுக கூட்டணியில் 1999 தேர்தலில் போட்டியிட்டு 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று , இரண்டாவது முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். திமுக- பாஜக கூட்டணி அமைந்ததற்கு பின்னணியில் சி.பி ராதாகிருஷ்ணன் இருந்ததாக பேச்சு இருக்கிறது. இதன் மூலம் திமுக பாஜகவின் நட்பு உறவை காட்டியது. 2004 ஆம் ஆண்டு, ராதாகிருஷ்ணன் நாடாளுமன்றக் குழுவில் ஒரு பகுதியாக ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றினார்.  

1999-க்கும் பிறகு மூன்று முறை நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டுள்ளார். ஆனால், இந்த அனைத்து தேர்தல்களிலும் அவருக்கு இரண்டாம் இடம்தான் கிடைத்தது. 2019ம் ஆண்டு பொதுத்தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் 5வது முறையாக போட்டியிட்டு, 3 லட்சத்து 92 ஆயிரம் வாக்குகளை பெற்றார். குறிப்பாக தமிழ்நாட்டின் இரண்டு பெரிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவின் கூட்டணி இல்லாமலேயே, 2014ம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட்டு 3 லட்சத்து 89 ஆயிரம் வாக்குகளை பெற்று இரண்டாவது இடம் பிடித்தார். அந்த தேர்தலில் சி.பி. ராதாகிருஷ்ணன் தோல்வியை சந்தித்து இருந்தாலும், கொங்கு பகுதியில் அவருக்கும், பாஜகவிற்கும் இருக்கும் செல்வாக்கை அந்த தேர்தல் வெளிச்சம் போட்டு காட்டியது. 

இந்நிலையில் ஜார்கண்ட் மாநில ஆளுநராக, சி.பி. ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மற்றும் தெலுங்கானா ஆளுநர் பதவியில் இருந்த தமிழிசை சவுந்தரராஜன், மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக, தனது பதவியை ராஜினாமா செய்தபோது, தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கூடுதல் பொறுப்பு, ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது. பின்னர் மகாராஷ்டிர மாநில ஆளுநராக மாற்றப்பட்டார் சி.பி.ராதாகிருஷ்ணன். எந்த மாநிலத்தில் இருந்தாலும் தொடர்ந்து தமிழக அரசியலை கவனிப்பவராகவும், கருத்துகள் தெரிவிப்பவராகவும் இருந்துள்ளார் ராதாகிருஷ்ணன்.

மகாராஷ்டிரா ஆளுநராக உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணனுக்கு துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை வாக்குகள் உள்ளதால் சி.பி.ராதாகிருஷ்ணன், அடுத்த துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவார் எனத் தெரிகிறது. இவரது தேர்வு பாஜகவுக்கு அரசியல் ரீதியாக பலனளிக்கக் கூடும் எனவும் தமிழகத்தில் காளுன்ற திணறிவரும் சூழலில் தமிழக மக்களின் கவனத்தை ஈர்க்க சி.பி ராதாகிருஷ்ணனின் முகம் உதவலாம் எனக் கூறப்படுகிறது.