மதுரை மாநகராட்சி நிர்வாகத்துடன் தூய்மை பணியாளர்கள் பேச்சுவார்த்தை தோல்வி தொடரும் போராட்டம்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களின் தூய்மைப்பணி தனியாருக்கு வழங்கப்பட்டதை எதிர்த்து, சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தூய்மைப்பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 10-க்கும் மேற்பட்ட நாட்கள் இந்த போராட்டம் நீடித்தது. இதனிடையே நள்ளிரவில் துய்மை பணியாளர்கள் அனைவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அப்போது சிலரை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர். அப்போது போலீசாருடன் அவர்கள் வாக்குவாதம் செய்து தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், மதுரை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பிரிவு ஒப்பந்த பணியாளர்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று காலை முதல் மாநகராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தூய்மை பணியாளர்கள் முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள்
மதுரை மாநகரை குப்பை நகரமாக மாற்றிய அவர்லேண்ட் தனியார் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்திட வேண்டும். துப்புரவு மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்களுக்கு அரசாணை 62 (2D)ன்படி குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26,000 வழங்கப்பட வேண்டும். தினக்கூலி தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகை போனஸாக ஒரு மாத சம்பளம் வழங்கப்பட வேண்டும். கொரோனா கால ஊக்கத்தொகை ரூ.15,000 உடனடியாக வழங்கப்பட வேண்டும். பணியாளர்கள் தங்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் வரை போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவதாக அறிவித்துள்ளனர். இதனால் மாநகராட்சியின் துப்புரவு சேவைகள் பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது.