இந்திய திரையுலகின் மிகவும் புகழ்பெற்ற இசையமைப்பாளராகிய இசைஞானி இளையராஜாவுக்கு கடந்த புதன்கிழமை நியமன எம்.பி. பதவியை மத்திய அரசு வழங்கியது. அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் சூழலில், இளையராஜாவுக்கு நியமன எம்.பி. பொறுப்பு வழங்கப்பட்டதை தங்கள் அரசியல் லாபத்திற்கு பயன்படுத்த பா.ஜ.க. முனைப்பதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இந்த நிலையில், தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் இளையராஜாவுக்கு நியமன எம்.பி. பொறுப்பு வழங்கப்பட்ட விவகாரம் குறித்து சிறப்பு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில் எழுதியிருப்பதாவது,
“ அவர் ஒரு படைப்பாளி. அவரை விட்டுவிடுங்கள். தேவையற்ற அவரே விரும்பாத விவகாரங்களில் அவரை நுழைத்து அவரது சிந்தனைகளைச் சிதறடித்துவிடாதீர்கள். அவரது ஆற்றல், சிகரங்கள் பலவற்றையும் தொட்டுவிட்டன. இருந்தும் அவரது தேடல் நிற்கவில்லை. ஆம்.
உண்மை படைப்பாளிகளுக்கு முற்றும் என்ற சொல் நிறைவளிப்பதில்லை. தொடரும் என்ற சொல்லே அவர்களது வேட்கையின் வெளிப்பாடு..! எல்லையற்ற இலக்கு..! இசைஞானி இளையராஜா ஒரு உண்மைப்படைப்பாளி. அவரை விவாதப் பொருளாக்கி அவர் இலக்கை மடைமாற்றி திசைதிருப்பாதீர்கள்!
எத்தனையோ பட்டங்களைப் பெற்றார் இளையராஜா. ஆனால், கலைஞர் தந்த இசைஞானி பட்டம் அவர் பெயரோடு இணைந்துவிட்டது. ஒன்றை ஒன்று பிரிக்க இயலாத சொல்லாக பிணைந்துவிட்டது. உள்ளார்ந்த உணர்வுகளில் உருவாகி சூட்டப்பட்ட பட்டம் என்பதால் அது உயிரோட்டம் கொண்டுள்ளது.
இசையில் இசைஞானி இளையராஜா தொட்ட எல்லை, தொட நினைக்கும் எல்லை நீண்டுகொண்டே இருக்கிறது. உங்கள் அரசியல் விளையாட்டில் அவரை இழுக்காதீர்கள். அவர் செல்லும் வேகத்திற்கு தடை ஏற்படுத்தாதீர்கள். இசையால் உள்ளங்களையும், மாநிலங்களையும் ஆண்ட இசைஞானி மக்களவை உறுப்பினராக சிறப்புற வாழ்த்துக்கள் என்று தலைவர் தளபதி கூறியுள்ளார்.
நமக்கெல்லாம் இதில் ஒரு மகிழ்ச்சிதான். காலம் காலமாக சனாதன தர்மத்தை உயர்த்திப்பிடித்த கூட்டத்தை இன்று சமூகநீதிப் பற்றிப் பேசவைத்துள்ளது. திராவிட இயக்கத்துக்கு கிடைத்த பெரும் வெற்றிதான். சமூகநீதி காக்க மண்டல் கமிஷன் அறிக்கையை செயல்படுத்த சமூக நீதிக்காவலன் வி.பி.சிங் அரசைக் கவிழ்த்து, கொண்டாடட்டம் நடத்திய கூட்டம் இன்று பழங்குடி இனப்பெண்மணியை குடியரசுத் தலைவர் வேட்பாளராகவும், பட்டியலினத்தைச் சேர்ந்தவரை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்திட வேண்டிய நிலையை ஏற்படுத்தி, அதனை சொல்லிக்காட்டிட வேண்டிய நிலையை உருவாக்கிய வகையில் திராவிட இயக்கம் பெற்ற பெரு வெற்றி இது.
இளையராஜா வர்ணாசிரம தர்மப்படி தலையில் பிறக்காவிடினும், இசை உலகம் அவரைத் தலைமையில் தாங்கிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. தலையில் பிறந்தவர்களுக்கே எல்லாத் தகுதியும் என்று கூறித்திரியும் கூட்டத்தின் தலைகனத்தை தகர்த்து, இசைப்பேருருவாய் எழுந்து நிற்கும் அந்த இசைஞானியை இசைப்பேரொளியை உங்கள் அரசியல் ஆதாயத்திற்கு பரப்புரை நடத்திடப் பயன்படுத்தாதீர்கள். அவரை விட்டுவிடுங்கள். ஆம். அவர் ஒரு படைப்பாளி. அவர் சிந்தனையோட்டத்தைச் சிதறடித்துவிடாதீர்கள்..!”
இவ்வாறு அதில் எழுதப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்