கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பாதிப்பு சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு, கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் தொடக்கத்தில் அதிக அளவிலான பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் தமிழக அரசின் சார்பில் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்ட பின்னர் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைய தொடங்கியது. ஆனால் தமிழக அரசு தொழிற்சாலைகள் இயங்க சில விதிவிலக்குகளை கொடுத்திருந்த நிலையில் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் அதிக அளவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கி உள்ளது.



ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று ஒரே நாளில் 1,694 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 66 ஆயிரத்து 274 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 2,078 பேர் கொரோனா நோய் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இதனால் தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்து 347ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் 10 பேர் உயிரிழந்த நிலையில் மாவட்டத்தில் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 435 ஆக உயர்ந்துள்ளது. தற்போது ஈரோடு மாவட்டம் முழுவதும் 15 ஆயிரத்து 492 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


பவானி ஓடத்துறை ஊராட்சி, மேல் காலனி கிராமத்தில் 260 குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் கூலித்தொழிலாளர்கள் நிறைந்த இக்கிராமத்தில் 116 பேர் புதியதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இக்கிராமத்திற்கு செல்லும் அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டு வெளி ஆட்கள் கிராமத்திற்கு செல்லவும் கிராமத்தினர் வெளியே செல்லாதவாறும் கண்காணிக்கப்படுகிறது. வருவாய் துறையினர் சார்பில் இக்கிராமத்திற்கு ஒருவார காலத்திற்கு தேவையான அரசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அளித்து வருகின்றனர். மேலும் சத்தியமங்கலம், அந்தியூர், கோபி உள்ளிட்ட ஊர்களில் உள்ள கிராமங்களிலும் தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்றைய தினம் ஈரோடு மாநகரில் மட்டும் 420 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 1,274 பேர் கிராமபுற பகுதியை சேர்ந்தவர்களாக உள்ளனர். கிராமப்புற பகுதியை சேர்ந்தவர்கள் அனைவரும் வீட்டைவிட்டு வெளியே வரும்போது கட்டாயமாக முககவசம் அணிந்து வர வேண்டும் என சுகாதாரத்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.