கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தடுப்பூசி போடும் பணிகள் இன்று நிறுத்தப்பட்டுள்ளன. குறைந்த அளவிலான தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் இருப்பதால், தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 



 

ப்ரூக் பீல்ட்ஸ் சாலையில் உள்ள சீத்தாலட்சுமி நகர் நல மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் தடுப்பூசி போட வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். இதேபோல கோவை மாவட்டத்தில் நகர மற்றும் புறநகர் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.



இதுகுறித்து தடுப்பூசி போட வந்த தியாகராய புது வீதி பகுதியை சேர்ந்த 65 வயதான சுப்பிரமணி கூறுகையில், "45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட பலரும் வந்தனர்.  நான் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டேன். இன்று இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த வந்தேன். ஸ்டாக் இல்லை எனக்கூறி வெள்ளிக்கிழமை வருமாறு தெரிவித்தனர். பல இடங்களிலும் தடுப்பூசி இன்று போடப்படவில்லை" இவ்வாறு அவர் தெரிவித்தார்.



 

இதுகுறித்து கோவை மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் ரமேஷ் கூறுகையில், கோவையில் 8 ஆயிரத்து 460 தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது. கையிருப்பில் உள்ள குறைந்தளவிலான தடுப்பூசிகளை செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை கோவையில் 3 இலட்சத்து 58 ஆயிரத்து 720 பேருக்கு போடப்பட்டுள்ளது" என்றார்.

கோவை அரசு மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனைகளில் தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.