அசைவ பிரியர்கள், மது குடிப்போர் தடுப்பூசி போடும் விதமாக சனிக்கிழமை தடுப்பூசி முகாம் நடக்க உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.


சென்னையில் நடமாடும் பல் மருத்துவமனை சேவையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், “செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் வாகனங்கள் மூலம் பல் மருத்துவ சேவை வழங்கப்படும். வரும் சனிக்கிழமை தமிழ்நாடு முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும். ஞாயிற்றுக்கிழமைக்கு பதில் இந்தவாரம் சனிக்கிழமை தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. 50,000 முகாம்களில் தடுப்பூசி போடப்பட உள்ளது” என்று கூறினார்.


 






அசைவ பிரியர், மது குடிப்போர் ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி முகாம்களில் பங்கேற்காமல் இருக்கிறார்கள் என்றும், அசைவம், மது எடுத்துக்கொண்டால் தடுப்பூசி செலுத்தக்கூடாது என்ற வதந்தியை நம்புகிறார்கள் என்றும் கூறிய அமைச்சர், அசைவ பிரியர்கள், மது குடிப்போர் தடுப்பூசி போடும் விதமாக சனிக்கிழமை தடுப்பூசி முகாம் நடக்க உள்ளதாகவும் கூறினார்.


 






தமிழ்நாட்டில் நேற்று  1,218 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதே சமயம்,  15 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.1,411 பேர் குணமடைந்தனர்.