அரசும் அரசு ஊழியர்களும்
அரசு என்ன தான் புதிய, புதிய திட்டங்களை அறிவித்தாலும், திட்டங்களை அமல்படுத்தினாலும் அந்த திட்டங்களை கீழ்நிலையில் உள்ள மக்களுக்கும் சென்று சேர்வதற்கு அரசு ஊழியர்கள் தான் முக்கிய பாலமாக இருந்து வருகிறார்கள். எனவே அரசு ஊழியர்கள் தான் அரசுக்கு நல்ல பெயரை வாங்கி கொடுப்பதும், கெட்ட பெயரை வாங்கி கொடுப்பதிலும் அவர்களின் செயல்பாட்டில் தான் உள்ளது. எனவே அரசு ஊழியர்களுக்கு என பல்வேறு சலுகைகள் திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழக அரசைப்பொறுத்த வரை தமிழக அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக அகவிலைப்படி உயர்வு, காப்பீட்டு திட்டங்கள், விடுப்பு, கடன் உதவி என பல சலுகைகளை வழங்கப்பட்டு வருகிறது.
பழைய ஓய்வூதிய திட்டம்
இருந்த போதும் அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கையாக இருப்பது பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊதிய விகிதத்தை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதற்காக பல கட்ட போராடங்களையும் நடத்திவருகிறார்கள். அந்த வகையில் இதில் முக்கிய கோரிக்கையாக இருப்பது பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதாகும், இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அளிக்க மூத்த ஐஏஎஸ் அதிகாரியான ககன் தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
அரசு ஊழியர்கள் சங்கத்தோடு ஆலோசனை
இந்த குழு அரசு பணியாளர் சங்கங்கள், ஆசிரியர்கள் சங்கங்களுடன் 9 சுற்றுகள் கூட்டங்கள் நடத்தியதோடு, எல்ஐசி மற்றும் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களுடனும் பல்வேறு கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்தி இடைக்கால அறிக்கையை தமிழக அரசிடம் கடந்த அக்டோபர் மாதம் சமர்ப்பித்தது. இதனையடுத்து இந்த இடைக்கால அறிக்கை தொடர்பாக அமைச்சர்கள் குழுவும் ஆலோசனை நடத்தியது. இதனிடையே பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தாமல் காலம் தாழ்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை அரசு ஊழியர்கள் சங்கங்கள் அறிவித்து வருகிறது. இதனையடுத்து பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக அரசு எடுத்துள்ள முடிவு தொடர்பாக ஆலோசிக்க அரசு ஊழியர்கள் சங்கங்களை பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு அழைத்துள்ளது.
அரசு ஊழியர்கள் சங்கத்திற்கு அழைப்பு
பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசு ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் வரும் 22.12.2025 அன்று பொதுப்பணி, நிதி மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்கள் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளனர். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து வரும் 22.12.2025 அன்று காலை 10.00 மணி சென்னை, தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் உ 10-வது தளத்தில் உள்ள ஆலோசனைக் கூடத்தில் தமிழ்நாடு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர்.
சட்டப்பேரவை கூட்டத்தில் முக்கிய முடிவு
இந்த பேச்சுவார்த்தையின் போது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்துவது தொடர்பாகவும், தமிழக அரசுக்கு அளிக்கப்பட்ட இடைக்கால அறிக்கை தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளது. இதனையடுத்து இந்த கருத்துகள் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வருகிற ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் அரசு ஊழியர்கள் கோரிக்கை தொடர்பாக முக்கிய முடிவு அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.