தமிழகத்தில் கொரோனாவின் புதிய அலை எழுந்துள்ளதாக என்ற கேள்விக்கு விடையளிக்கிறது இந்தக்கட்டுரை


• தமிழகத்தின் தலைநகரில் புதிய அலை தொடங்கிவிட்டது என்றால் கூட தப்பில்லை எனச்சொல்லும் அளவுக்கு, தற்போது கொரோனா பாதிப்பு மெல்ல, மெல்ல தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இதைத்தான் எச்சரிக்கை மணி அடிச்சாச்சு என சுகாதாரத்துறை செயலாளர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து, எச்சரிக்கை செய்துள்ளார். 


• கொரோனாவின் முதல் அலை பாதிப்பில் இருந்து எழுவதற்கு முன்பே, இரண்டாம் அலையில் சிக்கி பெரும் பாதிப்பைச் சந்தித்தது தமிழகம். மூன்றாம் அலை இதோ, அதோ என்று அச்சம் காட்டப்பட்டதே தவிர, அது வந்ததா, சென்றதா என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை. இந்த நிலையில், தற்போது ஒரு புதிய அலை உருவாக வாய்ப்பு இருப்பதை மறுக்க முடியாது என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்.


• அதற்கேற்ப, கடந்த ஒரு வாரமாகவே, தமிழகத்தின் தலைநகர்ச் சென்னையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை சிறிது, சிறிதாக உயர ஆரம்பித்துள்ளது. குணமடைவோரின் எண்ணிக்கையை விட, பாதிப்படைவோரின் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதுதான், அச்சத்தை விரிவுப்படுத்துகிறது. 


• அபாய அளவை எட்டவில்லை என்றாலும், மிக, மிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதைத்தான், சுகாதாரத்துறையின் சார்பில் அதன் செயலாளர் ராதாகிருஷ்ணன், எச்சரிக்கை மணி அடிச்சாச்சு என எச்சரிக்கை செய்துள்ளார்.


• இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஏப்ரல் மாதம் வெறும் 20 என்ற எண்ணிக்கையில் இருந்த கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை, தற்போது 200-யை தொடும் அளவுக்கு வந்துவிட்டது. பல மாவட்டங்களில் பூஜ்யமாக இருந்த கொரோனா பாதிப்பு, தற்போது விரல்விட்ட எண்ணக்கூடிய அளவிற்கு உயர ஆரம்பித்துள்ளது. ஆனால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், சில நாட்களாக, கவனிக்கத்தக்க அளவுக்கு கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.


• மூன்றாவது அலை, நான்காவது அலை அல்லது புதிய அலை என பெயர் சூட்டுவதில் கவனம் செலுத்தாமல், உடனடியாக பொதுமக்கள், கொரோனா சுய கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டியது மிக, மிக அவசியம் என தொற்றுநோய் தடுப்பு நிபுணர் டாக்டர் ஜான் பூபதி, ABP நாடு செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார். மேலும், தற்போதைய நிலையில் பதற்றம் தேவையில்லை என்றாலும் எச்சரிக்கை மிக அவசியம் என்பதை உணரும் தருணத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம் என உறுதிப்படத் தெரிவித்தார் டாக்டர் ஜான் பூபதி. 


• தற்போதைய நிலையில், தமிழகத்தில் BA4,  BA5 போன்ற உருமாறிய கொரோனா வைரஸ்களின் தாக்கம்தான் அதிகம் இருக்க வாய்ப்பு என மருத்துவ நிபுணர்கள் தெரிவிப்பதாக, தமிழக சுகாதாரத்துறை தெரிவிக்கிறது. தற்போது பரவும் வைரஸ் என்பது இரண்டாவது அலை போல் உயிர்க்கொல்லி அலையாக இருக்காது என்றாலும், பரவுதல் வேகம் அதிகமாக இருக்கும் என பொது எச்சரிக்கை மருத்துவ நிபுணர்களால் கொடுக்கப்படுகிறது.


• தலைநகர்ச் சென்னையைப் பொறுத்தமட்டில், மெட்ரோ ரயில்களில் மட்டும்தான் சமூக இடைவெளி மற்றும் முகக் கவசம் ஆகியவை ஓரளவு பார்க்கப்படுகிறது. மற்றபடி, புறநகர் மின்சார ரயில்கள், பேருந்துகளில் உள்ளிட்ட மற்ற பொதுப் போக்குவரத்துகளில், முகக் கவசம் எவ்வளவு விலை எனக் கேட்குமளவுக்குச் சென்றுவிட்டது என்பதுதான் யதார்த்தம். 


• பேருந்து மற்றும் ரயில்களில் நிற்கக்கூட இடமில்லை, தேனீர் கடைகள், ஹோட்டல்கள், மால்கள் என எங்கு நோக்கினும் பொதுமக்களை அடர்த்தியாகப் பார்க்கும் சூழல்தான் தற்போது இருக்கிறது. இது, கொரோனா பரவுதலுக்கு உகந்த சூழ்நிலை ஏற்படுத்துகிறது எனக் கூறுகிறார் ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் ராம செல்லையா.  சில மாதங்களுக்கு முன்பு இருமினால், கையில் குறைந்தபட்சம் கர்சீப்பாவது வைத்திருப்பார்கள், தற்போதெல்லாம் அதையெல்லாம் மறந்துவிட்டு இருமிக்கொண்டே, எச்சிலை துப்பிக்கொண்டே செல்வது நல்லதல்ல என எச்சரிக்கை செய்கிறார் டாக்டர் ராம செல்லையா. 


• தமிழகத்தை விட அதிக அளவில், கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கோவிட் 19 வைரஸ் பாதிப்பு, ஜூன் 1-ம் தேதியில் இருந்தே, அதிகரித்து வருகிறது. இதைச் சுட்டிக்காட்டி, உடனடியாக தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்கக்கோரி, மத்திய சுகாதாரத்துறை  செயலாளர் ராஜேஷ் பூஷண், சில குறிப்பிட்ட மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பியதும் குறிப்பிடத்தக்கது. 


ரஜினிகாந்த் படத்தில் வருவது போல், வாங்க பழகலாம் என்பது போல், கொரோனாவுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்  என யாரோ விளையாட்டிற்கு சொல்லப்போக, தற்போது, அதே தைரியத்தில், முகக் கவசம் அணிவது உள்ளிட்ட அனைத்தையும் மறந்துவிட்டோம்.. வீட்டிற்குள் முடங்கிய கிடந்த மோசமான நாட்களை நினைத்துப் பார்த்தாலே போதும், மீண்டும் சுயக் கட்டுப்பாட்டிற்குள் அனைவரும் வந்துவிடுவோம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது.