தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 22,238 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 33,25,940 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னை, (3,998), கோயம்பத்தூர் (2,865), சென்கல்பாட்டு (1,534), திருப்பூர் (1,497), சேலம் (1,181) உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.
சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை: மாநிலத்தில், தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,03,926 ஆக அதிகரித்துள்ளது. இதில், தோராயமாக, 45% பேர் சென்னை, கோயம்பத்தூர், செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களில் 1023 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும், 3814 பேர் ஆக்சிஜன் உதவி கொண்ட படுக்கையிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதாவது, பாதிக்கப்பட்டவர்களில் 2.3% பேருக்கு தீவிர நுரையீரலைப் பாதிக்கும் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இறப்பு எண்ணிக்கை: கடந்த 24 மணிநேரத்தில், கொரோனா தொற்று காரணமாக 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 37,544 ஆக அதிகரித்துள்ளது.
குணமடைவோர் எண்ணிக்கை: கடந்த 24 மணிநேரத்தில் 26,624 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியது (30,84,470). அதாவது, இதுவரை கோவிட்19 தொற்று கொண்டவர்களில் இதுவரை 92.7% பேர் குணமடைந்துள்ளனர்.
பாதிப்பின் தீவிரத்தன்மை என்ன? தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு சில தினங்களாக குறைந்து வருகிறது. இருப்பினும், மாநிலத்தின் மொத்த தினசரி தொற்று உறுதி விகிதம் (Daily positivity Rate) 17.6 ஆக உள்ளது. அதாவது, பரிசோதிக்கப்படும் 100 கொரோனா மாதிரிகளில் குறைந்தது 18 பேருக்கும் கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,28,077 கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், மாநிலத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 6 (6,05,57,722) கோடியாக அதிகரித்துள்ளது. திருப்பூர், தஞ்சாவூர், கோயம்பத்தூர், செங்கல்பட்டு, சென்னை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா சமூகப் பரவலாக காணப்படுகிறது.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 62 லட்சத்துக்கும் அதிகமாக (62,22,682) தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, இன்று காலை 7 மணி நிலவரப்படி 165.04 கோடியைக் (1,65,70,60,692) கடந்தது. வயது வந்த 75 சதவீதத்திற்கும் அதிகமானோர் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.
தடுப்பூசி உயிரிழப்பைக் குறைக்கும் :
முன்னதாக, இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை, கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களைப் பற்றிய விவரங்களை தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அளித்துது. கிடைக்கப்பெற்றுள்ள தரவுகளின்படி, ஜனவரியில் இருந்து 191 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.
இறந்தவர்களில் 94.5 சதவீதம் பேருக்கு ஏற்கனவே நீரிழிவு நோய், நாள்பட்ட சிறுநீரக பிரச்னைகள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய சம்பந்தப்பட்ட பிரச்னைகள் இருந்துள்ளன.
85 சதவீதம் பேர் 50 வயதுக்கு மேலானவர்கள்.
சமாளிக்க முடியாத இணை நோய்கள் கொண்ட மூத்த குடிமக்களாக இறப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த பிரிவில் உள்ளவர்களின் இறப்பு எண்ணிக்கை விகிதம்,(159 பேர்) பேர் 83.2% ஆக உள்ளது.
இறந்தவர்களில், 66 பேர்% தடுப்பூசி போட்டுக் கொள்ளாத (அ) முழு தவணை தடுப்பூசி டோஸ்களை போட்டுக் கொள்ளாதவர்கள்.
60 வயதிற்கு மேற்பட்டவர்களில், வெறும் 46 சதவீதம் பேர் மட்டுமே இரண்டு கட்ட தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். ஆனால், மாநிலத்தின் மக்கள்தொகையில் 64% பேர் இரண்டு கட்ட தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டுள்ளனர். எனவே, தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மூத்த குடிமக்கள் சற்றே பின்தங்கியுள்ளனர்.
எனவே, இணை நோய்கள் கொண்ட மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்த வேண்டும். மேலும், நாள்பட்ட சிறுநீரக பிரச்னைகள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய சம்பந்தப்பட்ட பிரச்னைகள் போன்ற கோவிட் அல்லாத இன்றியமையாத மருத்துவ சேவைகளில் கவனம் செலுத்த வேண்டும்.