தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு இன்று முதல் ஒரு வாரத்திற்கு தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தளர்வில்லாத ஊரடங்கு காலத்தில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை கருத்தில் கொண்டு, அரசின் சார்பில் நடமாடும் காய்கறி, பழங்கள் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் நடமாடும் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனையை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தொடங்கி வைத்தார். பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, “திருநெல்வேலி மாவட்டத்தில் நகர்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் 535 நடமாடும் கடைகள் மூலமாக காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்பட உள்ளது. விற்பனை விலையை கண்காணிக்க திட்ட அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் போதுமான அளவு இருப்பு உள்ளது. மகாராஷ்ட்ரா, ஒடிசா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வரப்படுகின்றன. இதுவரை ஸ்டெர்லைட் ஆலையில் இருநது 120 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்பட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தஞ்சை ஆகிய பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.




ஊரகப் பகுதிகளில் நோய்த்தொற்று அதிகமாக இருப்பதால் அங்கும் கொரோனா பாதுகாப்பு மையங்கள் படுக்கை வசதிகளுடன் புதியதாக ஏற்படுத்தப்பட உள்ளது. நோய்த்தொற்று பரவாமல் தடுப்பது குறித்து கண்காணிக்க கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. காய்கறி விற்பனையை கண்காணிக்க வட்டார அளவில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக, வேளாண்துறை வணிகவரித்துறை குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. மினி ஆட்டோ செல்ல முடியாத இடங்களிலும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க தள்ளுவண்டிகள் மூலம் விற்பனை செய்யப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


காய்கறி விற்பனையைத் தொடர்ந்து மளிகை தொகுப்பு வழங்குவதற்கான ஆலோசனைகள் செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பொதுமக்கள் ஊரடங்கு குறித்து அச்சப்பட தேவையில்லை. தேவையான அத்தியாவசிய பொருட்கள் வீடுகளுக்கே கொண்டுவந்து வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.




காய்ச்சல் வருவதை முன்கூட்டியே கண்டறிய திருநெல்வேலி மாவட்டத்தில் நடமாடும் பரிசோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை. இறப்பு விகிதத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் தமிழக அரசால் எடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் மனதில் தடுப்பூசி செலுத்துவதற்கான தயக்கம் இருந்து வருகிறது. இதனால், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே சீனாவில் இருந்து 20 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 12 திரவ ஆக்சிஜன் கிரையோஜெனிக் கண்டெய்னர்கள் திட்டமிட்டபடி சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதுபோல, சிங்கப்பூரில் இருந்து 1,500 ஆக்சிஜன் சிலிண்டர்கள் கப்பல் மூலம் விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. அவை சென்னைக்கு நாளை வந்தடையும்.




மேலும், தைவானில் இருந்து 20 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 4 கிரையோஜெனிக் கண்டெய்னர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் கொண்டு வரப்பட உள்ளது” என்று கூறியுள்ளார்.