முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் இதுகுறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை அமைக்கப்பட வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து நேற்று (டிச.8) காலை 10.30 மணிக்கு நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ராணுவ மையத்துக்கு Mi-17V5 ராணுவ ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது. அப்போது கடும் பனிமூட்டம் காரணமாக காட்டேரி மலைப்பகுதியில் உள்ள மலை முகடு ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் பயணம் செய்தனர். 


விபத்தில் சிக்கி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். கேப்டன் வருண் சிங் 80 சதவீதத் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 


பிபின் ராவத்தின் மறைவுக்கு நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். பிபின் ராவத்தின் மறைவையடுத்து தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும், அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும் பிபின் ராவத் பிறந்த மாநிலமான உத்தரகாண்ட் அரசு அறிவித்துள்ளது.


விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டி உள்ளிட்ட 3 பொருட்கள் காட்டேரி பகுதியில் உள்ள நச்சப்புராசத்திரம் மலைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டன. இந்த கருப்புப் பெட்டி டெல்லி அல்லது பெங்களூரு கொண்டு செல்லப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. 


டெல்லியிலிருந்து வந்த தொழில்நுட்பக் குழுவும், வெலிங்டன் ராணுவ மையக் குழுவும் இதனைக் கண்டுபிடித்தது. 3 மணிநேரமாக நடைபெற்ற தீவிரமான தேடுதலுக்குப் பிறகு இந்த கறுப்புப்பெட்டியைக் குழு கண்டுபிடித்ததாகவும் ராணுவத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும், ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதியில் தடயவியல் துறை இயக்குநர் சீனிவாசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு ஆய்வு நடத்தி வருகிறது. 5 அதிகாரிகள் கொண்ட குழுவினர், தற்போது விபத்து நடந்த காட்டேரி பகுதியில் தடயங்களைச் சேகரித்து வரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில் இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கருத்துத் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி மற்றும் மூத்த ராணுவ அதிகாரிகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. இதனால் மத்திய அரசு இதுகுறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி போன்ற வெளியாட்கள் தலைமையில் விசாரணையைத் தொடங்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 






 


முன்னதாக, ''வெளியில் இருக்கும் எதிரியைவிட உள்ளுக்குள் இருக்கும் எதிரியால் அதிக ஆபத்து ஏற்படும். வெளியில் இருக்கும் எதிரியை நீங்கள் அழிக்கலாம். ஆனால் உள்ளுக்குள் இருக்கும் எதிரியுடன் நீங்கள் வாழ்ந்துதான் ஆக வேண்டும்'' என பாஜக தேசியப் பொதுச் செயலாளர் சி.டி.ரவி நேற்று ட்வீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.