தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தஞ்சாவூர் அருகே அற்புரதப்புரத்தில் இலவச மின் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். தமிழகத்தில்  விவசாயிகள் மின் இணைப்புக்காக பதிவு செய்து காத்திருந்த 4.52 லட்சம் விவசாயிகளின் நலன் கருதி, ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் 4,819 விவசாயிகள் இலவச மின் இணைப்பு திட்டத்தின் மூலம் பயன் பெற உள்ளனர். அதில் 287 விவசாயிகளுக்கு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. 16 ஆம் தேதி 262 விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்திற்கான ஆணைகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக ஒரே ஆண்டில் ஒரு லட்சம் விவசாயிக்கான மின் இணைப்பு என்பது ஒரு வரலாற்று சாதனையாகும்.




1990 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியால், அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் என்ற சிறப்பு திட்டத்திற்கு அரசாணை வெளியிடப்பட்டபோது 12.40 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றனர். அடுத்த 31 ஆண்டுகளில் 10. 36 லட்சம்  விவசாயிகள் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெற்றனர். குறிப்பாக 2010–11 ஒரே ஆண்டில், 77,158 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. அதற்கடுத்து கருணாநிதி வழியில், முதல்வர் ஸ்டாலின் விவசாயிகளின் நலனில், அக்கறை கொண்டு, இந்த ஆண்டு என்பதைவிட ஆறு மாத காலத்தில், மார்ச் மாதத்திற்குள் இந்த ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்க கூடிய சிறப்பு திட்டத்தை விரைவாக செயல்படுத்துவதற்காக மாவட்டங்கள் தோறும் ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.


கடந்த 2003 ஆம் ஆண்டு மின் இணைப்புக்கு பதிவு செய்தவர்களுக்கு, தற்போது தான் கிடைத்துள்ளது. இது வரலாற்று சிறப்புமிக்க மிகப்பெரிய ஒரு திட்டம். தமிழ்நாட்டில், ஓவர்லோடு மின்மாற்றிகள் 8,986 கண்டெடுக்கப்பட்டன. இதில் தஞ்சாவூர் மாவட்டத்துல 696 இடங்களில் புதிய மின்மாற்றிகள் அமைக்கக்கூடிய பணிகள் நடந்து வருகிறது. அதில், 1,55 இடங்கள் பணி முடிந்துள்ளது. மீதி இருக்கக்கூடிய பணிகள் விரைவாக முடிக்கப்படும்.  மின் கட்டணம் மாதம்தோறும் கணக்கீடு தொடர்பாக தேர்தல் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒவ்வொரு வீட்டிற்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவது தொடர்பாகவும், அதே சமயம் மின்கணக்கீட்டாளர் பணி நியமனம் தொடர்பாகவும் பரீசிலனையில் உள்ளது. இதில், எந்த அளவுக்கு சாத்திய கூறுக்கள் உள்ளதோ அதே சமயம் நிச்சயம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.


தற்போது, கணக்கீடு செய்ய கூடிய பணியாளர்கள் 50 சதவீத அளவில் தான் உள்ளனர். கடந்த 5 மாத ஆட்சி பொறுப்பேற்று 5 மாத காலத்தில் 505 தேர்தல் வாக்குறுதிகள், 202 தேர்தல் வாக்குறுதிகளை முழுவதுமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. படிப்படியாக ஒவ்வொரு தேர்தல் வாக்குறுதியாக நிறைவேற்றபடும். மின்கம்பிகள் அறுந்து விழுந்து உயிர் இழப்பு ஏற்படுவது துரதிஷ்டமானது. வருங்காலத்தில் தரமான மின்கம்பிகள் அமைக்கப்பட்டு, அதற்கான கட்டமைப்புகளை வலுப்படுத்தப்படும்.


தஞ்சாவூர் மாவட்டத்தில் புதியதாக 9 துணை மின் நிலையமும், 15 துணை மின் நிலையங்கள் தரம் உயர்த்தவும் 163 கோடியில் திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டுள்ளது.  மின்வாரியத்தில் 56 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளது. முன்னுரிமையின் அடிப்படையில் பணியிடங்கள்  நிரப்படும். மின்வாரியத்திற்கு  1 லட்சத்து 59 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. இதற்கு ஆண்டு 16 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வட்டி செலுத்த கூடிய நிலையில்,  அதிகபட்ச வட்டிக்கு கடந்த ஆட்சியாளர்கள் கடன் வாங்கி உள்ளனர். இதெல்லாம் சீரமைக்க வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். இப்போது அவசர, அவசியம் கருதி, எந்தந்நத பணியிடங்கள் தேவையோ அவை நிரப்பப்படும்.   தமிழக முதலமைச்சரின் தொலை நோக்கு பார்வையில், தமிழகத்திற்கு வரக்கூடிய தொழிற்சாலைகள் இன்று விண்ணப்பித்தால், நாளை மின் இணைப்பு வழங்கப்படும் என்ற அளவிற்கு மின்சார துறையின் கட்டமைப்பு உள்ளது. தமிழகத்திற்கு, நிலக்கரி தேவை என்பது நாள் ஒன்றுக்கு 60 ஆயிரம் டன். தற்போது நான்கு நாட்களுக்கு தேவையான நிலக்கரி நம்மிடம் கையிருப்பு உள்ளது. அதனால் இப்போதைக்கு அந்த நிலக்கரி சம்பந்தப்பட்ட பிரச்சினை எதுவும் இல்லை. தேவையான அளவுக்கு மின்சார உற்பத்தியிலும் உள்ளது.  


மின்சார உற்பத்தியைப் பொருத்த வரைக்கும் நம்முடைய அனல்மின் நிலையத்தில 4,320 மெகாவாட் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் கடந்த ஆட்சியில், வெறும் 1,800 மெகாவாட் அளவுக்கு தான் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தற்போது, 3500 மெகாவாட் அளவிற்கு உற்பத்தி திறனை, அதிகரிக்கும் வகையில், பராமரிப்பு பணிகள் சிறப்பாக செய்துள்ளோம்.  மற்ற மாநிலங்களில் நிலக்கரி பற்றக்குறை உள்ளது. ஆனால் தமிழகத்தில், அந்த பற்றக்குறை இல்லை, எனவே பொதுமக்கள் அச்சப்பட வேண்டியதில்லை. கடந்த ஆட்சியில் மின்மிகை மாநிலம் என கூறப்பட்டது. ஆனால், 4 லட்சம் விவசாயிகள் மின் இணைப்பு கேட்டு காத்திருந்தனர். அவர்களுக்கு மின்இணைப்பு வழங்கவில்லை. ஆனால் தற்போது அதனை கருத்தில் கொண்டு காத்திருந்த விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தொழிற்சாலைக்கு இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கும் அளவிற்கு கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.