ஈரோடு கிழக்கு இடைதேர்தல்:
கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில், ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் அண்மையில் உடல்நலக்குறைவு காரணமாக, திடீரென அவர் உயிரிழந்தார். இதையடுத்து, அந்த தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. பின்னர் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு, இடைதேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் ஆலோசனை:
இந்த தேர்தலிலும் அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என, தி.மு.க. சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் யார்? என்பது குறித்து, சென்னையில் உள்ள காங்கிரஸ் மாநில தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று ஆலோசனை நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தலைமையிலான இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கே.வி.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர் எம்.பி. உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
இரண்டாவது நாளாக ஆலோசனை:
முடிவில் செய்தியாளர்களை சந்தித்த தினேஷ் குண்டுராவ், வேட்பாளர் யார் என்பது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்தப்பட்டு, வேட்பாளர் பெயர் கட்சி தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும், அதன் பிறகு கட்சி தலைமை முடிவு செய்யும் என்றும் கூறினார். அதைதொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும், தினேஷ் குண்டுராவ் தலைமையில் சத்யமூர்த்தி பவனில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஓரிரு நாட்களில் முடிவு?
அதன் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ் குண்டுராவ், "இந்த இடைதேர்தலில் போட்டியிடுவோர் என்னை சந்தித்து ஆலோசித்தனர். கட்சியின் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினோம். அறிக்கையை கட்சி மேலிடத்திற்கு அனுப்ப உள்ளோம். அவர்கள் வேட்பாளர் தொடர்பான இறுதி முடிவை எடுப்பார்கள். ஓரிரு நாட்களில் வேட்பாளர் யார் என்பது இறுதி செய்யப்படும். கட்சி எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் அனைவரும் ஈரோடு கிழக்கு தொகுதியில் பரப்புரையில் ஈடுபடுவர். திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன், இந்த இடைதேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவது 100% உறுதி. மக்கள் எங்களுக்கு ஆதரவு அளிப்பர் என்பதில் ஐயமில்லை.” என கூறினார்.
முன்னதாக ஆலோசனையின் போது, ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத்தை, தனது தந்தையுடன் சேர்ந்து தினேஷ் குண்டுராவை சந்தித்தார். திருமகன் ஈவேரா-வின் சகோதராரன இவர் தான், இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக பரப்புரை:
இதனிடையே, காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வ வேட்பாளரை அறிவிக்கும் முன்னதாகவே , திமுகவினர் ஈரோடு கிழக்கு தொகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுட தொடங்கிவிட்டனர். பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற உள்ள நிலையில், வேட்பு மனுத் தாக்கல் ஜனவரி 31-ம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.