ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். மோதல்:


பிரிந்து கிடக்கும் அதிமுக இணைந்து செயல்பட வேண்டும் என்ற மனநிலையில் தான் நாங்கள் ஆரம்பம் முதல் இருப்பதாகவும் ஓ.பன்னீர்செல்வம் நேற்று செய்தியாளர் சந்திப்பில் கூறினார். மேலும், இணைந்து செயல்பட பழனிச்சாமி அணியினருடன் பேச்சு வார்த்தை நடத்த தயார் என அவர் குறிப்பிட்டார். 


ஆனால் அவரது பேச்சு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, விரக்தியின் விளிம்பில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் பேசுவதாக குறிப்பிட்டார். மேலும் அவரை அதிமுகவில் இணைக்க திட்டமில்லை எனவும் கூறினார். 


குஜராத் பயணம் ஏன்?


இந்நிலையில் அ.தி.மு.க.வில் இணைந்து பணியாற்ற பேச்சு வார்த்தை நடத்த தயார் எனக் கூறிய பின்னரும் பழனிச்சாமி தரப்பில் இருந்து பச்சைக் கொடி காட்டப்படவில்லை. பன்னீர் செல்வம் மூன்றாம் தர தலைவர்கள் வரிசையில் இருந்து இருந்தால் அவர் எப்போதோ தி.மு.க.வோ பா.ஜ.க.வோ அல்லது வேறு எதாவது கட்சியில் இணைந்து இருக்க முடியும். ஆனால் அதிமுகவின் முன்னாள் முதல்வராக இருந்த பன்னீர் செல்வத்தின் அடையாளமே அதிமுகவும், இரட்டை இலையும் தான். 


இந்நிலையில், குஜராத் விரையும் ஓ.பன்னீர் செல்வம் அங்கு நடக்கவுள்ள பொங்கல் விழாவில் பங்கேற்கச் செல்கிறார். அங்கு பா.ஜ.க. மேலிடத்தில் பேசி எடப்பாடி பழனிசாமி தரப்பினருடன் இணைந்து செயல்படும் முயற்சியில் நிச்சயம் ஈடுபடுவார் என கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து அகமதாபாத் புறப்பட்டுள்ளார். 


இந்த பயணத்துக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த ஓ. பன்னீர் செல்வம் கூறியதாவது, அரசியல் காரணங்களுக்காக செல்லவில்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும் அதிமுகவில் அணியும் இருக்காது பிணியும் இருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார். 


ஏற்கனவே, “அதிமுகவின் சின்னம் முடங்க நான் காரணமாக இருக்க மாட்டேன்” என குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையில், முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில், ஈரோடு இடைத்தேர்தலுக்குப் பிறகு அதிமுக ஒரே அணியாக இருக்கும் என கூறியுள்ளார். 


ஏற்கனவே பழனிச்சாமி அணியில் உள்ள சிலர் ஓ. பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. அதுவும், அதிமுகவில் தற்போது கவுண்டர் சமுதாயத்தினைச் சார்ந்தவர்களின் கரங்கள் ஓங்கி இருப்பதால், ஓ. பன்னீர் செல்வத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டினை எடுத்தாலும் அதனை வெளிப்படையாக சொல்ல முடியாமல் இருக்கிறார்கள் என கூறுகின்றனர். 


2021ல் நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில், தென் தமிழ்நாட்டில் அதிமுக வாக்குகள் திமுகவுக்கும் கணிசமாக நாம் தமிழருக்கும், அமமுகவுக்கும் சென்றதால் அதிமுகவால் கொடி நாட்ட முடியவில்லை. இந்நிலையில் ஓ. பன்னீர் செல்வத்துக்கான ஆதரவாளர்களின் எண்ணிக்கையே உட்கட்சிக்குள்ளும் சட்டமன்றத்திலும் சொற்பமாகிவிட்டது.  


இந்நிலையில் பழனிச்சாமி மற்றும் பன்னீர் செல்வம் ஆகியோருக்கு இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சனை தீர்வுக்காக நீதி மன்றத்தில் இருக்கும் போது, ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் அதிமுகவுக்குள் காய்களை வேகமாக நகர்த்த வேண்டிய சூழலை ஏற்படுத்தியுள்ளது.


அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தில் இடைத்தேர்தல் நடந்தாலும், ஓ. பன்னீர் செல்வத்துக்கான செல்வாக்கு என்பது 1 சதவீதத்தை எட்டுமா என்பதே கேள்விக்குறிதான். ஆனால் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக களமிறங்க ஓ. பன்னீர் செல்வம் கையெழுத்து போட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.