ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்  இளங்கோவன் இன்று சபாநாயகர் அலுவலகத்தில் பதவியேற்றார்.




ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா உயிரிழந்ததையடுத்து அந்த சட்டமன்ற தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27-ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் திமுக சார்பில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் தரப்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதிமுக தரப்பில் முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசும், நாம் தமிழர் தரப்பில் மேனகாவும், தேமுதிக தரப்பில் ஆனந்தும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர்.




ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 27ஆம் நடைபெற்றது. இதில் 74.79% வாக்கு பதிவானது. இந்த இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1 லட்சத்து 10 ஆயிரத்து 556 வாக்குகள் பெற்றார். இந்த தொகுதி உருவானது முதல் சுமார் 60 ஆயிரத்திற்கு மேல் வாக்குகள் வித்தியாசத்தில் ஒரு வேட்பாளர் வெற்றி பெறுவது இதுவே முதன்முறை ஆகும்.


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரம்மாண்டமாக வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இன்று தலைமை செயலகத்தில் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள சபாநாயகர் அலுவலகத்தில் சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.




இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி, மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வையாபுரி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


ஈவிகேஎஸ் இளங்கோவன் பதவியேற்றதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். அதேபோல் உடனிருந்தவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.