தமிழ் சமூகத்தின் இன்றைய பெரிய பிரச்னையான டாஸ்மாக் ஆலமரம் போன்று பரந்து விரிந்து காணப்படுவதற்கு முக்கிய காரணம், யார் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.


“இந்தியாவில் இன்று நிலவும் பல பிரச்னைகளுக்கு காரணம் காங்கிரஸ் தான் என பிரதமர் மோடி அடிக்கடி குற்றம்சாட்டி வருகிறார். என்னதான் அதனை காங்கிரஸ் கடுமையாக மறுத்து வந்தாலும், அதில் பல உண்மைகளும் உண்டு. அந்த வகையில் இன்று தமிழ் சமூகத்தின் சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் பெரும் பிரச்னையான மதுபான விற்பனை, மாபெரும் வளர்ச்சி அடைந்து இருப்பதற்கு முக்கிய காரணமும் காங்கிரஸ் தான் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்..! ”


தமிழ்நாட்டில் மதுவிலக்கு:


ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்தே இன்று தமிழ்நாடு என குறிப்பிடப்படும் அன்றைய மதராசபட்டினம் மாகாணத்தில் மதுபான விற்பனை என்பது நடந்து வந்தது. 1937ம் ஆண்டு அப்போது முதலமைச்சராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜாஜி, மதுவிலக்கை அமல்படுத்துவதாக கூறி, தனது சொந்த மாவட்டமான சேலத்தில் முதலில் மது விற்பனையை தடை செய்தார். அதைதொடர்ந்து, வட ஆற்காடு, கடப்பா உள்ளிட்ட வேறு சில மாவட்டங்களுக்கும் இந்த மதுவிலக்கு விரிவுபடுத்தப்பட்டது. இதையடுத்து முதலமைச்சரான ஓமந்தூரார் ராமசாமி, மதராஸ் மாகாணம் முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்தினார். இந்த நடைமுறையானது இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் கூட நீண்ட காலத்திற்கு தொடர்ந்தது. 


காங்கிரஸ் வழங்கிய சலுகை:


நீண்ட காலத்திற்கு பிறகு மருத்துவ தேவைகளுக்காக மதுபானங்களை பயன்படுத்துவோர் மட்டும், உரிய ஆவணங்களை பயன்படுத்தி மதுபானங்களை பெற்றுக்கொள்ளலாம் என காங்கிரஸ் அறிவித்தது. இந்த சூழலை பயன்படுத்தி பல பணக்காரர்களும் போலியான ஆவணங்களை பயன்படுத்தி மதுபானங்களை வாங்கி குடிக்க தொடங்கினர். 


காங்கிரஸ் வீழ்ச்சி, திமுக எழுச்சி:


தமிழ்நாட்டில் பன்னெடுங்காலமாக ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரசை வீழ்த்தி, 1967ம் ஆண்டு முதன்முறையாக திமுக ஆட்சியை பிடித்தது. இந்தியாவில் காங்கிரசை வீழ்த்தி ஆட்சியை பிடித்த முதல் மாநில கட்சி என்ற பெருமையை அப்போது திமுக பெற்றது. இது காங்கிரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது. ஆனால்,  முதலமைச்சராக இருந்த அண்ணா எதிர்பாராத விதமாக உடல்நலக்குறைவால் காலமானார். தொடர்ந்து கருணாநிதி முதலமைச்சராக பொறுப்பேற்றார்.


அநீதி இழைத்த காங்கிரஸ்:


கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது தமிழக அரசு கடும் நிதிநெருக்கடியில் தவித்து வந்தது. அந்த நிலையில் தான், எந்தெந்த மாநிலங்களில் எல்லாம் மதுவிலக்கு அமல்படுத்தப்படுகிறதோ, அந்த மநில அரசுகளுக்கு சிறப்பு நிதியுதவி வழங்கப்படும் என அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து, தமிழ்நாட்டில் மதுவிலக்கு இருப்பதை குறிப்பிட்டு, சிறப்பு நிதியுதவியை வழங்க வேண்டும் என மத்திய அரசை நாடினார் கருணாநிதி. ஆனால், தனது அறிவிப்பு வெளியான பிறகு மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலங்களுக்கு மட்டுமே நிதியுதவி கிடைக்கும் என இந்திரா காந்தி விளக்கமளித்தார். (சட்டமன்ற தேர்தலில் காங்கிரசை திமுக வீழ்த்தியதற்கு பழிவாங்கும் நோக்கிலேயே இந்திரா காந்தி இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது. ) 


திரும்பப் பெறப்பட்ட மதுவிலக்கு:


மத்திய அரசு நிதியுதவி வழங்க மறுத்ததை தொடர்ந்து வேறு வழியின்றி நிதிச்சுமையை சமாளிப்பதற்காக, 1971ம் ஆண்டு தமிழ்நாட்டில் மதுவிலக்கை ரத்து செய்தார் முதலமைச்சர் கருணாநிதி. இதையடுத்து, மதுவிற்பனையால் தமிழக அரசிற்கு ஆண்டிற்கு 25 கோடி ரூபாய் வருவாய் கிடைக்க  தொடங்கியது. இருப்பினும், பலமுனைகளில் இருந்தும் தமிழக அரசுக்கு எழுந்த கடும் எதிர்ப்புகள் காரணமாக, 1974ம் ஆண்டு மீண்டும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார் கருணாநிதி.


எம்.ஜி.ஆர். தந்த ஏமாற்றம்:


காலங்கள் உருண்டோடதிமுகவில் இருந்து பிரிந்து சென்று தனிக்கட்சி தொடங்கிய, எம்.ஜி.ஆர். 1977ம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சரானார். அந்த தேர்தல் பரபுரையின் போது, தமிழ்நாட்டில் மதுவிலக்கு நிச்சயம் நீக்கப்படாது என பொதுமக்களிடையே சத்தியம் செய்தார். ஆனால், அரசுக்கு ஏற்பட்ட நிதிச்சுமையை சமாளிக்க முடியாமல் 1981ம் ஆண்டு தமிழ்நாட்டில் இருந்த மதுவிலக்கை எம்.ஜி.ஆர்., ரத்து செய்தார். அதோடு, மதுபான விற்பனையை ஒழுங்குபடுத்தி அதன்மூலம் வரும் வருவாயை அரசு முறையாக செலவிட வேண்டும் என்பதற்காக டாஸ்மாக்கை ஏற்படுத்தினார். அந்த அமைப்பு தான் தற்போது அபார வளர்ச்சி கண்டு ஆண்டிற்கு 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக தமிழக அரசுக்கு வருவாயாக ஈட்டி தருகிறது.


ஊட்டி வளர்த்த கருணாநிதி, ஜெயலலிதா:


எம்.ஜி.ஆரை தொடர்ந்து கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோர் மாறி மாறி முதலமைச்சர் பதவியை அடைந்தாலும் யாருமே தமிழ்நாட்டில் மீண்டும் மதுவிலக்கை அமல்படுத்த முயற்சிக்கவில்லை. தொடர்ந்து, டாஸ்மாக் மூலம் வரும் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், 2003ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மதுபான விற்பனை கடைகளின் எண்ணிக்கையை அதிகரித்தார். இதனால், மதுவிற்பனை மூலம் வரும் அரசுக்கான வருவாய் பன்மடங்கு அதிகரித்தது.


பின்புற கதவை திறந்த அதிமுக:


காலப்போக்கில் டாஸ்மாக் மூலம் வருவாய் அதிகரித்ததோடு, மதுவிற்பனைக்கான எதிர்ப்பும் பொதுமக்களிடயே அதிகரித்தது. இதனால், 1000 மதுபான கடைகள் மூடப்படும் என அதிமுக அரசு அறிவித்தது. ஆனால், முன்பக்க கதவுகளை மூடிவிட்டு சுவற்றின் மறுபக்கம் கதவை திறந்து மது விற்பன செய்தது எல்லாம் மறைக்க முடியாது வரலாறு. 2016ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் தமிழ்நாட்டில் மதுவிலக்கு கொண்டு வரப்படும் என அறிவித்த திமுக, ஏனோ 2021ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அதனை மறந்துவிட்டது.


நம்பிக்கை தந்த திமுக:


இந்த நிலையில் தான், பல்வேறு நீண்ட போராட்டங்கள், கோரிக்கைகள் மற்றும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகளை அண்மையில் திமுக அரசு மூடி உத்தரவிட்டது. இதையடுத்து, விரைவில் படிப்படியாக தமிழகத்தில் முழுமையாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது. ஒருவேளை அன்று, கருணாநிதி கேட்டபோது காங்கிரஸ் உரிய நிதியுதவியை வழங்கி இருந்தால், இன்று வருங்கால சமூகத்தின் கனவுகளை பறிக்கும் அரக்கனாக உருவெடுத்துள்ள டாஸ்மாக் எனும் அமைப்பே தமிழ்நாட்டில் உருவாகி இருக்காது என்பது தான் மறுக்க முடியாத உண்மை.