டெல்லி ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு சட்டமன்றம் தொடங்கப்பட்டு நூறு ஆண்டுகளை எட்டியதற்கான நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்கான அழைப்பை விடுத்துள்ளார்.
கடந்த 2012ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, அப்போதைய குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியை அழைத்து தமிழ்நாடு சட்டபேரவை தொடங்கப்பட்டதன் 60 ஆண்டுகள் நிறைவடைந்ததற்கான வைரவிழாவை நடத்தி இருந்தார். கடந்த 2012ஆம் ஆண்டில்தான் சட்டமன்றம் தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவு பெற்றதற்கான விழா கொண்டாடப்பட்ட நிலையில் 9 ஆண்டுகளுக்குள் எப்படி சட்டமன்றம் நூறு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தின் வைரவிழாவானது சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டமன்றப் பேரவையில் நடந்தது. இந்த விழாவில் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி, ஆளுநர் ரோசய்யா, உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி இக்பால் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். சட்டமன்ற வைரவிழாவை நினைவு கூறும் வகையில் கடற்கரை சாலையில் பிரமாண்ட வளைவையும் ஜெயலலிதா திறந்து வைத்திருந்தார்.
ஜெயலலிதா நடத்திய வைர விழாவை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் புறக்கணித்த நிலையில், தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான வைரவிழாவும், பவள விழாவும் திமுக ஆட்சியில் இருந்த 1997ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதியே தான் நடத்திவிட்டதாகவும், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை முடக்குவதற்காகவே ஜெயலலிதா இந்த வைரவிழாவை கையில் எடுத்திருப்பதாக விமர்சனம் செய்திருந்தார் முன்னாள் முதல்வர் கருணாநிதி.
இந்நிலையில் இந்தியா சுதந்திரம் அடைந்து 1952ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ராஜாஜி தலைமையில் அமைந்த புதிய அரசு பதவியேற்றதை கணக்கில் கொண்டே தமிழ்நாடு சட்டப்பேரவையின் வைரவிழா நடத்தப்பட்டதாக அதிமுக தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆனால் கருணாநிதி விடுத்திருந்த அறிக்கையில் தமிழ்நாட்டில் முதன்முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசானது நீதிகட்சி தலைமையில் ஆட்சி அமைத்த 1921ஆம் ஆண்டை கணக்கிட்டு 1997ஆம் ஆண்டிலேயே சட்டமன்ற பேரவையின் பவளவிழா மற்றும் வைரவிழா ஆகியவை நடத்தப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
2021ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வென்று 16ஆவது சட்டமன்றம் புதிதாக அமைந்துள்ள நிலையில் அதன் நூற்றாண்டு விழாவை கொண்டாட முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ள நிலையில் தமிழ்நாடு சட்டமன்றத்தின் வரலாற்றை சற்றே திரும்பி பார்போம்…
1919ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் இந்தியாவில் இந்தியாவின் வைசிராயாக இருந்த செம்ஸ்போர்டு பிரபு மற்றும் பிரிட்டிஷ் இந்திய செயலாளர் எட்வின் சாமுவேல் மாண்டேகு ஆகியோர் இணைந்து பிரிட்டிஷ் இந்திய மாகாண நிர்வாகங்களில் இந்தியர்களுக்கு சுயாட்சி வழங்கும் பரிந்துரையை லண்டன் நாடாளுமன்றத்திற்கு அனுப்பினர். இது இந்திய அரசுச்சட்டம் 1919 என்ற பெயரில் நிறைவேற்றப்பட்டு, சென்னை, பம்பாய், வங்காளம், பஞ்சாப் ஆகிய மாகாணங்களில் வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன் மக்கள் பிரதிநிதிகள் கொண்ட சட்டமன்றங்கள் முதன்முறையாக நிறுவப்பட்டன.
மாண்டேகு செம்ஸ்போர்டு பரிந்துரை அடிப்படையில் சென்னை மாகாணத்தில் 1920 ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் நீதிக்கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று சுப்பராயலு தலைமையில் ஆட்சி அமைந்தது. இங்கிலாந்து அரசின் பிரதிநிதி கன்னாட் கோகன் முன்னிலையில் முதல் மாகாண சட்டபேரவையானது 1921ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி கூடியது. இதனை அடிப்படையாக வைத்தே தற்போது திமுக, தமிழ்நாடு சட்டபேரவையின் நூற்றாண்டு விழாவை கொண்டாட முடிவு செய்துள்ளது.