தீவிரமடையும் ஒமிக்ரான் காரணமாக, இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு நிறைய காட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், நேற்று சென்னை மாநகர காவல்துறை சார்பில் ஒரு அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பில்,
29.12.2021 31.12.2021 அன்று இரவு 12.00 மணிக்கு மேல் அத்தியாவசிய வாகன போக்குவரத்தை தவிர மற்ற வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது.
செய்தி வெளியீடு எண்:197/12/2021, தேதி 28.12.2021 செய்திக்குறிப்பின் தொடர்ச்சியாக, இன் தற்போதுள்ள சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு. மேலும் கலந்து ஆலோசனை செய்யப்பட்டு சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வருகின்ற 31.12.2021 அன்று இரவு 12.00 மணிக்கு மேல் அத்தியாவசிய தேவைகள் தொடர்பான வாகன போக்குவரத்தை தவிர. மற்ற வாகன போக்குவரத்திற்கு 01.01.2022 அன்று காலை 05.00 மணி வரை அனுமதி இல்லை.
எனவே பொதுமக்கள் அனைவரும் மேலே குறிப்பிட்ட 31.12.2021 இரவு 12.00 மணிக்கு முன்பு தங்கள் பயணங்களை அன்று முடித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. இதுவரை எந்த குழப்பமும் இல்லை. ஆனால் இன்று காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், ‛டிசம்பர் 31 இரவு 12 மணிக்கு கோயில்கள் திறக்கப்பட்டிருக்கும் என்றும், புத்தாண்டு தரிசனம் செய்து கொள்ளலாம். சாமி தரிசனத்திற்கு தடையில்லை, தனி மனித இடைவெளி, முக கவசம் அணிந்து விதிகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்து கொள்ளலாம் என்றும்,’ கூறியுள்ளார். இங்கு தான் பிரச்சனை ஆரம்பிக்கிறது.
இரவு 12 மணி முதல் வாகனங்களுக்கு அனுமதியில்லை என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இரவு 12 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு, சாமி தரிசனம் செய்யலாம் என்கிறார் அமைச்சர். இதில் எதை நம்பி, மக்கள் திட்டமிட முடியும் என்கிற குழப்பம் தான் அது. அமைச்சர் கூறிவிட்டார் என இரவில் தரிசனம் செய்ய கோயிலுக்குச் சென்றால், வீடு திரும்பும் போது கமிஷனர் உத்தரவுப்படி போலீசார் வழக்குப்பதிவு செய்ய வாய்ப்புள்ளது. அல்லது அபராதம் விதிக்கப்படலாம். இப்படி இரு வேறு இடியாப்ப சிக்கலில் பொதுமக்களை குழப்பும் விதமாக உள்ளது இந்த அறிவிப்புகள்.
தெளிவற்ற இந்த அறிவிப்புகள் குறித்து அரசு தரப்பில் தெளிவுபடுத்த வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து அமைச்சர் சேகர்பாபுவிடம் ஏபிபி நாடு சார்பில் கேட்ட போது, ‛‛ஏற்கனவே நடைமுறையில் உள்ள சில கோயில்கள் மட்டும்தான் நள்ளிரவு 12 மணிக்கு திறக்கப்படும்; எல்லா கோயில்களும் அல்ல. அப்படி திறக்கப்படும் கோயில்களில் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் சூழலுக்கு ஏற்ப சென்று தரிசிக்கலாம். கோயிலுக்கு போறது நல்ல விஷயம். உண்மையிலேயே கோயிலுக்கு போறவங்கள யாராவது தடுப்பாங்களா ?,’’ என்று கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்