மரக்காணம் ஒன்றிய தலைவர் பதவியை கைப்பற்ற திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் இடையே மோதல் காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒன்றிய தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க சார்பில் 17 கவுன்சிலர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 1 கவுன்சிலர், அ.தி.மு.க 3 கவுன்சிலர்கள், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 2 கவுன்சிலர், சுயேச்சையாக 3 நபர்கள் உள்பட 26 கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர்.
இதில் தி.மு.க கூட்டணியில் 18 கவுன்சிலர்கள் வெற்றி பெற்றதால் மரக்காணம் ஒன்றிய பதவியை தி.மு.க கைப்பற்றும் நிலை உள்ளது. இதனை தொடர்ந்து இன்று 22ஆம் தேதி ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்வும், துணைச் ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்வு நடைபெற இருந்த நிலையில் திமுக சார்பில் இரண்டு வேட்பாளர்கள் ஒன்றிய தலைவர் பதவிக்கு போட்டியிட இருந்தனர். இந்த நிலையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மரக்காணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தயாளனை ஒன்றிய தலைவர் என அறிவித்திருந்தார். இந்த நிலையில் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் நல்லூர் கண்ணன் பல வருடங்களாக நான் திராவிட முன்னேற்றக் கழகத்தில் பணியாற்றி வருகிறேன், மேலும் எனக்கு அதிமுக மற்றும் பாமக சுயேட்சை வேட்பாளர்கள் ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர் என்று ஒன்றிய தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். இந்த நிலையில் மரக்காணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தயாளனது ஆதரவாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் செயல்படுவதாக கூறி நல்லூர் கண்ணன் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் நல்லூர் கண்ணன் ஆதரவாளர்கள் மற்றும் மரக்காணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தயாளன் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. மேலும் தயாளன் ஆதரவாளர்கள் நல்லூர் கண்ணனை மனுத்தாக்கல் செய்ய விடாமல் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மரக்காணம் மத்திய ஒன்றிய செயலாளர் நல்லூர் கண்ணன் அவர்களுக்கு அதிமுக, பாமக, சுயேட்சை உள்ளிட்ட கட்சிகளின் கவுன்சிலர்கள் ஆதரவு தருவதால் வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதனால் இதனை தடுக்கும் வகையில் மரக்காணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தயாளன் அவரை மனுத்தாக்கல் செய்ய விடாமல் ஆதரவாளர்களை கொண்டு மோதலில் ஈடுபட்டு வருகிறார். இதன் காரணமாக மரக்காணம் பகுதியில் உச்சகட்ட பரபரப்பு நிலவியது. மேலும் தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணன் பதற்றத்தை குறைக்கும் வகையில் தேதி அறிவிப்பின்றி ஒன்றிய தலைவர் தேர்தல் ஒத்தி வைப்பதாக அறிவித்தார். மேலும் தேர்தல் தேதி ஒத்திவைத்ததை தொடர்ந்து நல்லூர் கண்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அனைவரும் சென்னை புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த சாலை மறியலில் போலீசார் சுமூக பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கலைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்