திமுக அரசு பொறுப்பேற்றப் பின் மின்சாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற செந்தில் பாலாஜி, தற்போது வரை அதிக விமர்சனங்களை சந்திக்கும் அமைச்சராக வலம் வருகிறார். தொடர் மின் தடை காரணமாக எழுந்த புகார்களின் அடிப்படையில், ‛அணில்’ தொல்லையால் மின் வயர்கள் பாதிக்கப்படுவதாக அளித்த பேட்டியிலிருந்து தொடங்கியது இந்த பஞ்சாயத்து. 




அதன் பின், தமிழ்நாடு முழுவதும் பரவலாக மின் வினியோகம் பாதிப்பை சந்தித்து வர, அமைச்சர் தரப்பில் அது முற்றிலும் மறுக்கப்பட்டது. மேலும், தவறான தகவல் தருவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது. இந்நிலையில், மின் வினியோகம் தொடர்பான டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அடுத்தடுத்து புகார் வைக்க, திமுக-பாஜக மோதலாக அது மாறியது.


இன்றுவரை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் புகாரில் உறுதியாக நிற்கும் பாஜக தலைவர் அண்ணாமலை,அது தொடர்பாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியும், அதை சட்டப்படி சந்திக்க தயாராக இருப்பதாக கூறிவருகிறார். இதெல்லாம் ஒருபுறமிருக்க, அரசு முறை பயணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி இங்கிலாந்து சென்றுள்ளார். அங்குள்ள மின் உற்பத்தி முறைகள் குறித்து அறிந்து வர அமைச்சர் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. 






அமைச்சரின் அந்த பயணத்தையும் பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக சாடியிருந்தார். இந்நிலையில் இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி போட்டோக்கள் சிலவற்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இங்கிலாந்து சென்று தனது வருகையை அவர் பதிவு செய்திருக்கும் நிலையில், அதிலும் சிலர் வந்து தங்கள் பகுதியில் மின்சாரம் இல்லை என்று புகார் தெரிவித்து வருகின்றனர். 






 


அபுபக்கர் சித்திக் என்பவர், அமைச்சரின் பதிவில் ஒரு புகாரை பதிவு செய்துள்ளார். அதில்...


‛‛6 மணி நேரமா கரெண்ட் இல்லை. கிழக்கு தாம்பரம் மின்வாரிய அலுவலத்திற்கு போன் செய்தால், அவங்க போன் எடுக்கலை. வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு 35 முறை போன் செய்தேன். எடுக்கவே இல்லை; கட் ஆகுது. நல்லா இருக்கு...’’


என்று கடுமையான கண்டனத்தை புகாராக தெரிவித்துள்ளார். 


அதே புகாரில், முகமது சாதிக் அலி என்பவர் தனது மற்றொரு புகாரையும் பதிவு செய்துள்ளார். அதில்....


‛‛ஐயா... நான் ஏற்கனவே ட்வீட் செய்திருந்தும் மின்சாரம் வரவில்லை. இரவு நேரத்தில் மட்டும் அடிக்கடி இடையூறு ஏற்பட்டு பவர் ஆஃப் ஆகிறது. எங்களால் தூங்க முடிவதில்லை, அது அடுத்த நாள் வேலைகளையும் பாதிக்கிறது. தயவுசெய்து எனது ட்வீட்டுக்கு பதிலளிக்கவும்’’






என்று முகமது சாதிக் அலி தனது புகாரை பதிவு செய்துள்ளார். 


இங்கிலாந்து சென்றும், புகார் இம்சைகள் துரத்தி வருவதால், அமைச்சர் செந்தில் பாலாஜி கொஞ்சம் மூட் அவுட் ஆகியிருக்க கூடும்.