பழனி - பொள்ளாச்சி ரயில் நிலையங்களுக்கு இடையே 63 கிலோமீட்டர் தூரத்திற்கு ரயில் பாதை மின்மயமாக்கல் பணி நிறைவு பெற்றுள்ளது. இந்த புதிய மின் ரயில் பாதையை பெங்களூரு தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் திங்கள் கிழமையன்று (07.3.2022) ஆய்வு செய்தார். அவரது சிறப்பு ஆய்வு ரயில் பழனியில் இருந்து காலை 08.30 மணிக்கு புறப்பட்டது.
வழியில் சண்முகா நதி ஆற்றுப்பாலம், புஷ்பத்தூர் அருகே ரயில் பாதை மேலே குறுக்கிடும் மின் வழித்தடம், மைலாபுரம் வயலூர் ரயில்வே கேட், மைவாடி ரோடு உப மின் நிலையம் மற்றும் ரயில் நிலையம், உடுமலைப்பேட்டை ரயில் நிலையம், நடைமேம்பாலம், கோமங்கலம் ரயில் நிலையம் ஆகியவற்றில் ஏற்படுத்தப்பட்டுள்ள மின் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். உடுமலைப்பேட்டை ரயில்நிலையத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணியாளர்கள் மின் ரயில் பாதைப் பணி பாதுகாப்பு விதிகளை முறையாக அறிந்துள்ளனரா என சோதித்து ஆய்வு செய்தார்.
மின்சார ரயில்களை இயக்குவதற்கு 25000 வோல்ட் மின்சாரம் பாயச்சப்படுவதால் பொதுமக்கள், பயணிகள் மின்சார கம்பிகளை தொடவோ, நெருங்கவோ வேண்டாம் என எச்சரிக்கை விளம்பர பலகைகள் இருக்கிறதா எனவும் ஆய்வு செய்தார். பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் மதியம் 12.45 மணிக்கு நிறைவு செய்து பாலக்காடு ரயில்வே பிரிவில் ஆய்வைத் தொடர்ந்தார். அவருடன் ஆய்வில் முதன்மை மின் பொறியாளர் ஆர்.கே.மேத்தா, முதன்மை மின்மயமாக்கல் திட்ட இயக்குனர் சமீர் டிஹே, மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் ஆகியோர் பங்குபெற்றனர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Keezhadi Excavation | பாசி மணி, பகடைச் சில்லுகள்... அப்டேட் ஆகும் கீழடி அகழாய்வு 8-ம் கட்டம் !